பௌத்த யாத்திரிகர்கள் இலங்கைக்கு விரைவாக நாடு திரும்புவதை இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் ஒருங்கிணைத்து வருகின்றன

பௌத்த யாத்திரிகர்கள் இலங்கைக்கு விரைவாக நாடு திரும்புவதை இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் ஒருங்கிணைத்து வருகின்றன

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்வரும் வர்த்தக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதையடுத்து, வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் புத்த சாசன அமைச்சு ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து, புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் ஆகியன தற்போது இந்தியாவில் உள்ள இலங்கையைச் சேர்ந்த பௌத்த யாத்திரிகர்கள் இலங்கைக்கு விரைவாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்தும் திறம்பட ஒருங்கிணைத்து, வசதிகளை வழங்கி வருகின்றன.

 

மார்ச் 18 ஆம் திகதியன்று 700 யாத்திரிகர்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட வர்த்தக விமானங்கள் மூலமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பினர். பயணச்சீட்டுக்களை வேறு திகதிகளுக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை உட்பட, அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் ஆகியன மேற்கொண்டன.

 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதற்கு முன்னர், கடைசி வர்த்தக விமானமானது மார்ச் 18 நள்ளிரவில் புதுடெல்லியிலிருந்து இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், தற்போது (19 மார்ச் 2020 காலை 10 மணி) வரையில் புதுடெல்லியிலும் சென்னையிலும் உள்ள 17 பிரயாணக் குழுக்களைச் சேர்ந்த மொத்தம் 871 இலங்கை பௌத்த யாத்திரிகர்கள் இலங்கைக்கு நாடு திரும்புவதை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

 

இலங்கை அரசாங்கம் ஒரு சிறப்பு விமானம் மூலமாக இக்குழுவினரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இலங்கைத் தூதரகங்கள் இந்த யாத்திரிகர்கள் குழுவினருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றன.

 

இதேவேளை, புதுடெல்லியிலிருந்தும் சென்னையிலிருந்தும் நாளாந்தம் இடைமாறும் பயணிகளைக் கொண்டு செல்லும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானங்கள் இந்த யாத்திரிகர்களையும் கொண்டுவருவதற்கு சம்மதித்துள்ளது. இவ்விமானங்கள் 19 - 25 மார்ச் 2020 காலப்பகுதியில் புதுடெல்லியிலிருந்தும் சென்னையிலிருந்தும் தினமும் 18.30 மற்றும் 09.35 ஆகிய மணி நேரங்களில் புறப்படும்.

 

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸில் உள்ள இருக்கைகளுக்கு அமைவாக, எஞ்சியுள்ள யாத்திரிகர்களும் பயணிப்பதற்கான ஏற்பாடுகளை இரண்டு தூதரகங்களும் மேற்கொண்டு வருகின்றன.

 

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்
புதுடெல்லி
19 மார்ச் 2020
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close