பிரார்த்தனைகள், கரோல்கள் மற்றும் பொழுதுபோக்குகளுடன் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் 2022 டிசம்பர் 28ஆந் திகதி மாலை கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது.
உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தனவின் வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானதைத் தொடர்ந்து சிங்கப்பூர் செயின்ட் மேரிஸ் ஒஃப் ஏஞ்சல்ஸ் தேவாலயத்தில் இருந்து வணக்கத்திற்குரிய தந்தை ஜூலியன் மரியரத்தினம் அவர்களின் ஆரம்ப பிரார்த்தனையுடன் ஆரம்பமானது. வணக்கத்திற்குரிய தந்தை ஜூலியன் ஒரு சுருக்கமான சொற்பொழிவை நிகழ்த்தியதுடன், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் அவரது போதனைகளின் கொண்டாட்டமான கிறிஸ்மஸ்ஸில், இரக்கத்தின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தினார்.
நிகழ்விற்கு வருகை தந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசிய உயர்ஸ்தானிகர் பிரேமவர்தன, அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் உணர்வில் அனைவரையும் ஒன்றிணைப்பதில் நத்தார் பண்டிகையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் இருந்து உயர்ஸ்தானிகர் மேற்கோள் காட்டியதுடன், இது நாடு எதிர்கொண்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் ஒருவருக்கொருவர் கருணை மற்றும் உதவிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவாகத் தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தற்போதைய கடினமான பொருளாதார நிலைமை முழுவதும், இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு அந்த இரக்கத்தையும் உதவியையும் உள்ளடக்கியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றுநோய் முழுவதும், டெமாசெக் சர்வதேச அறக்கட்டளை, ஏனைய தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூர் சமூகத்தின் மூலம் சிங்கப்பூர் அரசாங்கம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்புக்கு ஆதரவளிப்பதற்கும், தொற்றுநோய்களின் போது இலங்கையர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் வழங்கிய விலைமதிப்பற்ற உதவிகளை உயர்ஸ்தானிகர் நினைவு கூர்ந்தார். இலங்கையின் பல கலாச்சார மற்றும் பல மதத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையின் சமூகக் கட்டமைப்பில் இலங்கை கிறிஸ்தவ சமூகம் ஒரு முக்கியமான மற்றும் ஒருங்கிணைந்த அங்கமாக இருப்பதாக உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரில் உள்ள ட்ரூ லைட் சமூக தேவாலயத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய கலாநிதி. சாமுவேல் குஞ்சுமோன், இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அனைத்து ஊழியர்களுக்குமான இறுதி பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாதங்களுடன் மத அனுஷ்டானங்களை நிறைவு செய்தார்.
தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் கிறிஸ்மஸ் பாடல்கள் பாடப்பட்டன. அப்போது அங்கிருந்த இளம் சிறார்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தா பரிசுகளை வழங்கினார்.
அனைத்து விருந்தினர்களுக்கும் வழங்கப்பட்ட மாலை தேநீர் உபசரிப்புடன் நிகழ்வு நிறைவுற்றது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
சிங்கப்பூர்
2022 டிசம்பர் 30