ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கையின் 75வது சுதந்திர  தினக் கொண்டாட்டம்

ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கையின் 75வது சுதந்திர  தினக் கொண்டாட்டம்

இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கை சமூகத்துடன் இணைந்து இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவை ரோமில் 2023 பெப்ரவரி 04ஆந் திகதி தூதரக வளாகத்தில் கொண்டாடியது. தூதுவர் ஜகத் வெள்ளவத்த தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மகுல்பேரா இசைக்கப்பட்டதுடன்,  அதனைத் தொடர்ந்து சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

சியாம் நிக்காயவின் மல்வத்தை பிரிவின் கட்டானியா பௌத்த விகாரையின் பிரதமகுரு வணக்கத்திற்குரிய வாகேகொட சீலானந்த தேரர் மற்றும் இத்தாலியிலுள்ள இலங்கை புலம்பெயர்ந்தோருக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் வணக்கத்திற்குரிய நெவில் ஜோ பெரேரா ஆகியோர் சமய  வழிபாடுகளை முன்னெடுத்தனர். பாரம்பரிய எண்ணெய் தீபம் பௌத்த மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள், தூதுவர், தூதரக ஊழியர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளால் ஏற்றப்பட்டது.

பௌத்த மற்றும் கத்தோலிக்க மதகுருக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, பங்குபற்றிய  அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி கொடியேற்ற நிகழ்வு நிறைவு பெற்றது.

சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்கான இராஜதந்திர வரவேற்பு தூதரகத்தால் ரோமில் பிப்ரவரி 06ஆந் திகதி நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் இத்தாலியின் வெளிவிவகார  அமைச்சின் அதிகாரிகள், இத்தாலியிலுள்ள இராஜதந்திரப் படைகள், ரோம் நகரை தளமாகக் கொண்ட ஐ.நா. நிறுவனங்களின் பிரதிநிதிகள், இத்தாலிய அரசாங்க அதிகாரிகள், இத்தாலிய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் ஜகத் வெள்ளவத்த, இலங்கைக்கும் இத்தாலிக்கும்  இடையிலான இருதரப்பு உறவுகள் அண்மைக் காலமாக பல ஒத்துழைப்புத் துறைகளாக விரிவடைந்துள்ளதாகவும், இருதரப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு என்ற ரீதியில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக இத்தாலிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையர்கள் புலம்பெயர்வதற்கும் வேலை செய்வதற்கும் ஐரோப்பாவில் மிகவும்  விருப்பமான இடமாக இத்தாலி உள்ளது என்றும் தூதுவர் மேலும் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, 100,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வாழ்ந்து, வேலை செய்வதுடன், அவர்கள் இலங்கையின் இருதரப்பு உறவுகளின் ஒரு முக்கிய பரிமாணத்தை உருவாக்கும் அதே வேளை, அவர்கள் அனுப்பும் பணம் இலங்கைக்கான அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரமாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

தனது உரையில், நிகழ்வின் பிரதம அதிதியான இராஜதந்திர நெறிமுறையின் தூதுவர் புருனோ  அன்டோனியோ பாஸ்கினோ, இலங்கையின் அமைதியான அழகைப் பாராட்டியதுடன், இத்தாலிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய அலுவலகத்தின் தலைவர் ஜியோவானா பிக்கரேட்டா, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் சுமூகமான உறவை எடுத்துரைத்தார்.

விருந்தினர்கள் இலங்கையின் பாரம்பரிய நடனங்களான கஜக வண்ணம மற்றும் வடிக படுன  மற்றும் இத்தாலியில் வசிக்கும் மற்றும் படிக்கும் இலங்கை மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்திய பாரம்பரிய நடனமான கதகளியை ரசித்தனர்.

அனைத்து விருந்தினர்களுக்கும் 'மாலை' என்ற சமையல் கருப்பொருளின் கீழ் இலங்கையின்  பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

இலங்கைத் தூதரகம்,

ரோம்

2023 பிப்ரவரி 22

Please follow and like us:

Close