ஓமானுக்கான இலங்கையின் முதலாவது கோழிப்பண்ணை உற்பத்தி ஏற்றுமதிகளை ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆரம்பித்து வைத்துள்ளது

ஓமானுக்கான இலங்கையின் முதலாவது கோழிப்பண்ணை உற்பத்தி ஏற்றுமதிகளை ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆரம்பித்து வைத்துள்ளது

DSC_0058

 வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பொருளாதார இராஜதந்திரத் திட்டத்தின் கீழ், இலங்கையின் கோழிப்பண்ணை உற்பத்திகளை முதன் முதலாக ஓமான் சுல்தானேட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆரம்பித்து வைத்துள்ளது. இலங்கையின் ஃபார்ம்ஸ் பிரைட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் ஏற்றுமதி செய்யப்பட்ட இலங்கையின் உறைந்த கோழியின் முதல் 30 மெட்ரிக் டொன் சரக்குகளை ஓமானின் மிகப்பெரிய உறைந்த இறைச்சி இறக்குமதியாளர்களில் ஒன்றான அல் ஹமாடி டிரேடிங் அன்ட் கொன்ட். எல்.எல்.சி. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃப்ளின் எம்.வி. டி லிமா அவர்களிடம் கையளித்த தருணத்தில், 'ஜி.சி.சி பிராந்தியத்தில் முதன் முறையாக இலங்கையின் புதிய ஏற்றுமதித் தயாரிப்பொன்றுக்கு புதிய சந்தை வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய திருப்புமுனையாகும்' என ஓமான் சுல்தானேட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் தெரிவித்தார்.

'இலங்கையின் உணவுப் பொருட்களுக்கு இப் பிராந்தியத்தியில் பெருமளவிலான எதிர்பார்ப்புக்கள் இருப்பதுடன், இந்த முயற்சி இலங்கையின் கோழிப்பண்ணை உற்பத்திப் பொருட்களை இந்தப் பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான புதியதொரு அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது' என திரு. ஃப்ளின் எம்.வி. டி லிமா தெரிவித்தார். 'இலங்கையின் இறைச்சி உற்பத்தி ஜி.சி.சி சந்தையில் வணிக ரீதியாக இவ்வளவு பெரிய அளவில் உள்நுழைவது வரலாற்றில் இதுவே முதலாவது தடவையாகும்' என பி.பி.ஓ.எஸ். குளோபல் எல்.எல்.சி. யின் தலைமை நிறைவேற்று அதிகாரி அன்ஸ்லம் பெரேரா தெரிவித்தார்.

ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் 2019 ஒக்டோபர் 01 ஆந் திகதி மஸ்கட்டில் ஏற்பாடு செய்திருந்த பி 2 பி சந்திப்புக்களில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் 'பொருளாதார இராஜதந்திரத் திட்டத்தின்' கீழ் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து பங்கேற்ற இலங்கையின் மிகப் பெரிய உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான ஃபார்ம்ஸ் பிரைட் லிமிடெட், அல் ஹமாடி டிரேடிங் அன்ட் கொன்ட். எல்.எல்.சி. நிறுவனத்துடன் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. தேவையான நடைமுறைகளைப் பூர்த்தி செய்து, கோழிப்பண்ணை உற்பத்திப் பொருட்களை இலங்கையிலிருந்து ஓமான் சுல்தானேட்டுக்கு இறக்குமதி செய்வதற்கான அனுமதி உரிமத்தை ஓமான் சுல்தானேட்டின் விவசாய மற்றும் மீன்வள அமைச்சு வழங்கியது. பி.பி.ஓ.எஸ். குளோபல் எல்.எல்.சி. நிறுவனமானது ஃபார்ம்ஸ் பிரைட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் உள்ளூர் முகவராக செயற்படுகின்றது.

இலங்கை கோழிப்பண்ணை உற்பத்திப் பொருட்களை முதன்முறையாக ஓமானுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான அனுமதி உரிமத்தை வழங்கியமைக்காக தூதுவர் அமீர் அஜ்வத் ஓமான் சுல்தானேட்டின் விவசாய மற்றும் மீன்வள அமைச்சிற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் மத்தியிலான சவாலான தருணத்தில், இந்த முயற்சியை வெற்றிகரமாக்குவதற்கான அயராத முயற்சிகளை நல்கியமைக்காக, ஃபார்ம்ஸ் பிரைட் லிமிடெட், அல் ஹமாடி டிரேடிங் அன்ட் கொன்ட். எல்.எல்.சி. மற்றும் பி.பி.ஓ.எஸ். குளோபல் எல்.எல்.சி. நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மஸ்கட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற இறக்குமதி நிறுவனத்திடம் ஏற்றுமதி தொடர்பான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வில் ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முதல் செயலாளர் டப்ளிவ்.டி.என்.எம். அபேசேகர மற்றும் பி.பி.ஓ.எஸ். குளோபல் எல்.எல்.சி. நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அன்ஸ்லம் பெரேரா ஆகியோரும் தூதுவருடன் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கைத் தூதரகம்

மஸ்கட்

10 ஜூன் 2020

Please follow and like us:

Close