பெய்ரூட்டில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் உதவி

பெய்ரூட்டில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் உதவி

2020 ஆகஸ்ட் 06 ஆந் திகதிய நிலவரப்படி, பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிப்பில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5000 நபர்களைத் தாண்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ள அதே வேளை, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை.

மூன்று நாட்கள் தேசிய துக்க நிலையை லெபனான் அறிவித்துள்ளதுடள், உயர் பாதுகாப்பு சபை பெய்ரூட்டை ஒரு பேரழிவு நகரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. 2020 ஆகஸ்ட் 04ஆந் திகதி முதல் இரண்டு வார காலத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட் 10ஆந் திகதி வரை லெபனான் முடக்க நிலையில் உள்ளது.

கோரிக்கைகளுக்காகவும், பொதுமக்களுக்கு சேவை செய்யும் முகமாகவும் இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் 0800 மணி முதல் 1600 மணி வரை நாளாந்தம் திறந்திருக்கும் அதே வேளையில், தூதரக அலுவலகம் மற்றும் தூதரக அதிகாரிகளின் குடியிருப்புக்களின் சேதங்கள் திருத்தப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலானவர்கள் தூதரகத்திற்கு வருகை தந்து, சந்தேகங்களுக்கான தெளிவையும், ஆறுதல்களையும் கோரி வருகின்றனர்.

உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பணிகள் தொடருவதுடன், அதிகமானோர் உலர் உணவுப் பொருட்களுக்காக கோரிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்கால அமைதி காக்கும் படையினருடன் தூதுவர் தொடர்ந்தும் நெருக்கமான உரையாடலை மேற்கொண்டு வருவதுடன், விரிவான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக லெபனான் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஒற்றுமை மற்றும் இரங்கல் செய்தி ஆகியன 2020 ஆகஸ்ட் 05ஆந் திகதியாகிய நேற்று ஜனாதிபதி மைக்கேல் அவுனுக்கு வழங்கப்பட்டதுடன், அதே தினத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் இரங்கல் செய்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

 

இலங்கைத் தூதரகம்

பெய்ரூட்

06 ஆகஸ்ட் 2020

 

Please follow and like us:

Close