இலங்கை, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் இணை-தலைமையில், பரவல் மற்றும் ஆயுத்தத்தடையாக்கம் தொடர்பிலான, 15வது ஆசியான் பிராந்திய மன்றக்கூட்டம், 2024, ஏப்ரல் 29 முதல் மே 01 ம் திகதி வரை, அமெரிக்காவின் ஹவாயில் நடைபெற்றது. இச்சந்திப்பானது, கடந்த ஆண்டு இலங்கை, பரவல் மற்றும் ஆயுதத்தடை தொடர்பிலான 14வது ஆசியான் பிராந்திய மன்றக்கூட்டத்தை, கொழும்பில் நிகழ்த்தியதைத் தொடர்ந்து இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், அணுசக்தியின் தீங்கற்ற மற்றும் அமைதியான பயன்பாடுகள், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பு, உத்திசார் அபாயங்களைக் குறைத்தல், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல், மீளாத்தன்மை, சரிபார்ப்பு ஆகியவற்றின் சமகால முக்கியத்துவம், ஆயுத பரவல் மற்றும் ஆயுதத்தடையாக்கம் ஆகியவற்றின் வெளிப்படைத்தன்மை, பாலினத்தின் பங்கு மற்றும் ஆயுதக் குறைப்பு தொடர்பிலான விவாதத்தில் இளைஞர்களின் பங்கேற்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், புருனே, கம்போடியா, கனடா, சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், லாவோ பிடிஆர், மலேசியா, மொங்கோலியா, மியான்மர், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கொரியக்குடியரசு, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, திமோர்-லெஸ்ட், ஐக்கிய அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இரண்டு நாட்களாக உயிரோட்டமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டன.
பல்தரப்பு விவகாரங்களின் மேலதிக செயலாளர் மொஹமட் ஜௌஹர், மீளமுடியாத தன்மை, சரிபார்ப்பு, பரவல் மற்றும் ஆயுதத்தடையாக்கத்தின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த அமர்வில் ஒரு குழு உறுப்பினராக மெய்நிகராகப்பங்கேற்றதுடன், பல ஆண்டுகளாக உலகளாவிய ஆயுதக் குறைப்பு நிகழ்ச்சி நிரலில், இலங்கையின் பங்களிப்பையும், இத்தடை ஒப்பந்தம் தொடர்பான விரிவான அணுவாயுதத்தின் பொருத்தற்பட்டையும் எடுத்துரைத்தார். வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகளின் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கியதுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் மேக்ஸ்வெல் கீகல், பரவல் மற்றும் ஆயுதத்தடையாக்கம் தொடர்பில் பாலினம் மற்றும் இளைஞர்களின் பங்கு பற்றிய குழு விவாதத்தை நெறியாள்கை செய்தார்.
2007 ஆம் ஆண்டு முதல் இலங்கை, ஆசியான் பிராந்திய மன்றத்தின் உறுப்பினராக, ஆசியான் பிராந்திய மன்றக் கூட்டங்களை நிகழ்த்தியதுடன், இது மூலோபாய பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மற்றும் உறுப்பினர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 மே 06