ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் ஒருங்கிணைந்த மற்றும் சீரான அணுகுமுறைக்கு இலங்கை அழைப்பு விடுத்தது

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் ஒருங்கிணைந்த மற்றும் சீரான அணுகுமுறைக்கு இலங்கை அழைப்பு விடுத்தது

போதை மற்றும் மனோவியல் மருந்துகளின் கடத்தலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவை அவசியமாகும் என்பதை சுட்டிக்காட்டி, இந்த சிக்கலைக் கையாள்வதில் விநியோகம் மற்றும் தேவைப்பாட்டின் குறைப்பு, பாவனை மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் ஒருங்கிணைந்த மற்றும் சீரான அணுகுமுறைக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அவதானிப்புக்கள், கடந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெற்ற குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி, குற்றவியல் நோக்கங்களுக்காக தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்கொள்வதுடன் தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மூன்றாவது குழுவின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐ.நா. மற்றும் மனிதவளப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி. பிரமுதிதா மனுசிங்க அவர்களால் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விடயங்களை வலுப்படுத்துவதில், சர்வதேச நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு மரபுகளுக்கு அமைவாகவும் UNODC மற்றும் பிற உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து இலங்கை முழுமையாக ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சர்வதேச குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு, தெற்காசியாவிற்கான அதன் பிராந்திய அலுவலகம் வழங்கிய தொழில்நுட்ப உதவிகளுக்காக UNODC க்கு அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
பரஸ்பர சட்ட உதவி மற்றும் குற்றவாளிகளை ஒப்படைத்தல் உள்ளிட்ட குற்றவியல் விடயங்களில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்த திருமதி. மனுசிங்க, இந்த குற்றங்களைத் தடுப்பதற்கும் எதிர்த்துப் போராடுவதற்கும் பலதரப்பு ஒத்துழைப்புக்களும் மேம்படுத்தப்பட்டுள்ள அதே வேளை, அனைத்து வகையான மற்றும் வெளிப்பாடுகளையுடைய குற்றங்களையும் தேசிய மட்டத்தில் தடுப்பதற்கும், எதிர்ப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் புடாபெஸ்ட் சைபர் குற்றங்களுக்கான சாசனத்திற்கான அரச தரப்பாகியது முதல், சைபர் குற்றத்தை நிர்வகிக்கும் இலங்கையின் தேசிய சட்டத்தை சர்வதேச தரங்களுக்கு ஏற்ப மீண்டும் புதுப்பித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு ஒரு விரிவான சைபர் பாதுகாப்பு மூலோபாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், சைபர் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு குறித்த சட்டம் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் விரிவாகக் குறிப்பிட்டார்.
செயலாளர் நாயகம் ஆரம்பித்த வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான ஐ.நா. வியூகத்திற்கு இலங்கை மேலும் தனது ஆதரவை தெரிவித்தது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்த இலங்கையின் அனுபவம் குறித்து கருத்து தெரிவிக்கையில், எந்த ஒரு நாடும் தீவிரமயமாக்கல், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விடுபடுவதற்கான எதிராற்றலைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கான ஒரு தெளிவான நினைவூட்டல் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டது. அனைத்து வகையான இனவெறி, வெறுப்பு மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை கண்டிக்கும் அதே வேளையில், இந்த உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்காக ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கும் உறுதிபூணுமாறு அனைத்து நாடுகளுக்கும் இலங்கை அழைப்பு விடுத்தது.
பெண்களின் முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சி நிரலின் கீழ் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மூன்றாவது குழுவில் கருத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐ.நா. மற்றும் மனிதவளப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி திலினி குணசேகர, ஏறக்குறைய 30 ஆண்டுகளாக நாட்டை வதைத்த பிரிவினைவாத பயங்கரவாதத்தின் பின்னர், யுத்தத்தினால் உருவாக்கப்பட்ட விதவைகள் உட்பட பெண்களின் தலைமையிலான குடும்பங்களை மையப்படுத்தி பெண்களின் பொருளாதார வலுவூட்டலில் இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். ஐ.நா. பாலின கருப்பொருள் குழுமத்தின் ஆதரவோடு, சுகாதாரம், வருமானப் பாதுகாப்பு மற்றும் உளவியல் சேவைகள் போன்ற அம்சங்களில் பெண்களின் தலைமையிலான குடும்பங்களுக்கான தேசிய செயற்றிட்டத்தை இலங்கை உருவாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பாலின சமத்துவம், மகளிர் மற்றும் பெண்களுக்கான அதிகாரம் மற்றும் அமைதியை அடைவதற்கும் நிலைநிறுத்துவதற்கும், பெண்களின் உரிமைகளுக்கு மரியாதையளித்தல் ஆகியவற்றில் நேர்மறையான மாற்றத்தை துரிதப்படுத்த முற்படும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் 1325ஆம் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிட்டத்தை ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஐ.நா. பெண்களின் ஆதரவுடன் இலங்கை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த வருடம் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பெய்ஜிங் இயங்குதளத்திற்கான 25 வது ஆண்டுவிழா குறித்து சுட்டிக்காட்டிய அவர், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் குறித்து விரிவான மீளாய்வு செய்வதற்கும், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான தடைகளை நிவர்த்தி செய்வதற்கு மீதமுள்ள இடைவெளிகளை அடையாளம் காண்பதற்கும் சரியான தருணம் இதுவாகும் என குறிப்பிட்டார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74 வது அமர்வில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் இளைஞர் பிரதிநிதிகளான திருமதி. கங்குலாலி த சில்வா மற்றும் திரு. அம்ரித் எதிரிசூரிய ஆகியோர், கடந்த வாரம் நடைபெற்ற 'சமூக அபிவிருத்தி' தொடர்பான மூன்றாவது குழுவின் பொதுவான கலந்துரையாடலில் உரையாற்றினர்.
இலங்கையின் இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், சமூக வளர்ச்சியின் ஒரு பகுதியாக, இளைஞர்களின் திறன் இடைவெளியைக் குறைப்பதிலும், இளைஞர்களின் வேலையின்மையைக் கையாள்வதிலும் உள்ள சவால்கள் மற்றும் செயலில் உள்ள வழிமுறைகளை அங்கீகரித்தல் மற்றும் சமூகத்தில் உள்ள சமூக துயரங்கள் மற்றும் உறுதியற்ற தன்மை ஆகியவற்றின் முக்கிய ஆதாரங்களை குறைத்து அகற்றுவதற்கான தீர்வுகளை அடையாளம் காண வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் கவனத்தை ஈர்த்தனர்.
இலங்கை மக்களின், குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இளைஞர்களின் எதிர் ஆற்றலை நினைவுகூர்ந்த அதே வேளையில், சமூக ஒத்திசைவில் கவனம் செலுத்துவதற்கும், ஒரே இலங்கையர் என்ற ரீதியிலான சமூகத்தை அபிவிருத்தி செய்வதற்குமான முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. 'இளைஞர்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு, தோல்விகளை ஒப்புக்கொண்டு, அதிலிருந்து முன்னோக்கி நகர்வதற்கான வழிகளை நாடுவது முக்கியமாகும். ஏனையவர்களை மதிக்கும் அதே வேளை, ஆற்றுப்படுத்தல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டில் இளைஞர்களும் வழிநடத்தப்பட வேண்டும்' என இளைஞர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2019 அக்டோபர் 11
Pic2

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐ.நா. மற்றும் மனிதவளப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி திலினி குணசேகர

pic1

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐ.நா. மற்றும் மனிதவளப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி. பிரமுதிதா மனுசிங்க

pic3

இலங்கையின் இளைஞர் பிரதிநிதி திருமதி. கங்குலாலி த சில்வா

pic4

இலங்கையின் இளைஞர் பிரதிநிதி திரு. அம்ரித் எதிரிசூரிய

Please follow and like us:

Close