
இலங்கை மற்றும் தாய்லாந்து 2025, மார்ச் 25 அன்று, பெங்கொக்கில் உள்ள தாய்லாந்து இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சில் 6வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தன. இக்கூட்டத்திற்கு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி அருணி ரணராஜா மற்றும் தாய்லாந்தின் வெளியுறவுக்கான நிரந்தரச் செயலாளர் திருமதி எக்சிரி பின்தருச்சி ஆகியோர் இணை-தலைமை தாங்கினர்.
ஆலோசனைக் கூட்டத்தின் போது, இரு பிரதிநிதிகளும் தங்கள் நாடுகளில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட "தூய்மையான இலங்கை" முயற்சித்திட்டம் உட்பட, சமீபத்திய தேசிய முன்னேற்றங்கள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இலங்கைத் தரப்பு தாய்லாந்து பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தது.
சரியான நேரத்தில் ஆலோசனைகளை நடாத்துவதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்ட இரு தரப்பினரும், இருதரப்பு உறவுகளை விரிவாக மதிப்பாய்வு செய்யவும், தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் ஈடுபாட்டிற்கான புதிய துறைகளை இணங்காணவும் இத்தளம் சிறந்த வாய்ப்பொன்றை வழங்கியதாக குறிப்பிட்டனர். பெங்கொக்கில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம், சுற்றுலா மற்றும் பிற விடயங்களின் கட்டமைப்பிற்குள் பரந்த அளவிலான துறைகளை உள்ளடக்கியதாய் அமைந்தது.
பொருளாதார விடயங்கள் குறித்த கலந்துரையாடல்களின் போது, தாய்லாந்து முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கு இலங்கையில் நிலவும் சாதகமான சூழலை வெளியுறவுச் செயலாளர் ரணராஜா எடுத்துரைத்தார்; இது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பொருளாதார கூட்டாண்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது. முதலீடு மற்றும் வர்த்தகத்தில் பொருளாதார ஈடுபாட்டை உயர்த்துவதற்கான வாய்ப்புகளை இரு தரப்பினரும் ஆராய்ந்தனர். இலங்கை - தாய்லாந்துக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான விடயங்களிலும், முதலீடு, உட்கட்டமைப்பு, விவசாயக் கைத்தொழில், மீன்வளம், இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், சுற்றுலா, சிறிய, நடுத்தரக் கைத்தொழில்கள், நிதிசார் சேவைகள், பொதியிடல் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம் போன்ற அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்தினர்.
இவ்வாலோசனைகளின் பொது, பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன; இரு தரப்பினரும் இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கம் (IORA), பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC), தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் (ASEAN), விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் (RCEP) மற்றும் ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் (ACD) போன்ற பிராந்திய கட்டமைப்புகள் மூலம் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டுறவு அமைப்புகளின் கட்டமைப்பிற்குள் தமக்கிடையில் நீட்டித்துக்கொண்ட கூட்டாண்மையை இரு தரப்பினரும் மீளாய்வு செய்தனர்; மேலும் பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்களில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் அவர்கள் வலியுறுத்தினர். தாய்லாந்தின் தலைமைத்துவத்திற்கும், எதிர்வரும் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்து நாடாத்துவது குறித்தும், அதனுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டங்களையும், 2025 ஏப்ரல் தொடக்கத்தில் பெங்கொக்கில் திட்டமிடப்பட்டுள்ள இளம் சந்ததியினரின் பிம்ஸ்டெக் தொடக்க மன்றத்தையும் நடத்துகின்றமை குறித்தும் வெளியுறவுச் செயலாளர் ரணராஜா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இவ்வாண்டில், நிகழவிருக்கின்ற இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 வது ஆண்டு நிறைவை, பெங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சினால் ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் அறிவுப் பகிர்வு கருத்தரங்குகள் மற்றும் இலட்சினைப் மற்றும் நினைவு அஞ்சல் பெட்டி வடிவமைப்புப் போட்டி போன்ற நிகழ்வுகள் மூலம் இரு நாடுகளும் நினைவுகூரலை மேற்கொள்ளவுள்ளன. இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இலட்சினைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழாவும், ஆலோசனைகளின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
கலாச்சார புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) புதுப்பித்தல் மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல் உள்ளிட்ட கலந்துரையாடல்களின் விளைவுகளை மீளத்தொடர்வதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இலங்கையானது, இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் அடுத்த சுற்றினை, பரஸ்பரமாக ஒப்புக் கொள்ளப்பட்ட திகதியொன்றில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது.
தாய்லாந்து பிரதிநிதிகள் குழுவில் பணிப்பாளர் நாயகம் திருமதி சசிரித் தங்குல்ரத், பிரதீப் பணிப்பாளர் நாயகம் திருமதி வனலி லோஹ்பெச்ரா, பணிப்பாளர் திரு. கசெம்சன் தோங்சிரி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி நரீட்டா சுப்ரடிஸ்ட், ஆலோசகர் திரு. போங்போப் மெத்தகுல்லாவத் மற்றும் தூதரக அதிகாரி திரு. பூரிதாத் பென்யோர்க் ஆகியோர் அடங்குவர். இலங்கையின் பிரதிநிதிகள் குழுவில் தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் திருமதி விஜயந்தி எதிரிசிங்க, பணிப்பாளர் (தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா) திருமதி திலினி இஹலகே, வர்த்தகத்துறைக்கான பதில்ப் பணிப்பாளர் திருமதி சந்திமா கிரிவந்தல, இலங்கை தூதரகத்தின் உயரசேவைத் தலைவர் திருமதி ஏ.டபிள்யூ.எஸ். சமன்மலி மற்றும் ஆலோசகர் (வர்த்தகம்) திருமதி விரேஷிகா பண்டார ஆகியோர் அடங்குவர்.
ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, செயலாளர் ரணராஜா தாய்லாந்தின் வெளிநாட்டு அலுவல்களுக்கான துணை அமைச்சர் பேராசிரியர் லலிவன் கர்ஞ்சனாச்சாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கலாச்சார இராஜதந்திரத்தை வலுப்படுத்துதல், ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராய்தல் மற்றும் தேரவாத பௌத்தத்தில் வேரூன்றிய நீண்டகால கலாச்சார உறவுகளை மேலும் ஆழப்படுத்துதல் ஆகிய விடயங்கள் அவர்களுக்கிடையிலான ஆலோசனைகளின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வளர்ந்து வரும் கூட்டாண்மையில் 6வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள், குறிப்பிடத்தக்கதொரு மைல்கல்லைக் குறித்து நிற்கின்றன; இது இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்கான இருதரப்பினதும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 மார்ச் 27







