
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புலம்பெயர்வு கூட்டாண்மைக்கான, நிபுணர்களின் மூன்றாவது கூட்டம், 2025 ஜூலை 29 அன்று பெர்னில் நடைபெற்றது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன மற்றும் சுவிஸ் கூட்டாட்சி நீதி மற்றும் காவற்துறைத் திணைக்களத்தின் இடம்பெயர்வுக்கான இராஜாங்க செயலகத்தின் சர்வதேச அலுவல்களுக்கான பணிப்பாளரும், தூதுவருமான ஹென்ட்ரிக் க்ரோஸ்கோப் ஆகியோர் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கினர்.
2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து புலம்பெயர்வு கூட்டாண்மையின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இக்கூட்டம் மீளாய்வு செய்ததுடன், இருதரப்பு பாதுகாப்பான தொழிலாளர் இடம்பெயர்வுத் திட்டம் (SLMP) கடந்த ஆண்டு இலங்கை அரசாங்கத்திடம் முறையாக ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டாண்மையின் எதிர்காலப் பாதை குறித்து ஆலோசித்தது. இத்திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து நிதியளித்ததுடன், இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான நிலைபேறான கட்டமைப்புகளை நிறுவனமயமாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பாதுகாப்பான, சீரான மற்றும் வழக்கமான புலம்பெயர்வை ஊக்குவிப்பதற்கும், தாய்நாடு மற்றும் சென்றடையும் நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு புலம்பெயர்வின் நன்மைகளை அதிகரிப்பதற்கும் இரு தரப்பினரும் தமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். இதன்போது மேலும், புறப்படுவதற்கு முந்தைய நோக்குநிலை, புலம்பெயர்வு முகாமைத்துவம், திறன்சார் அபிவிருத்தி, மீள்-அனுமதி, மீள்-ஒருங்கிணைப்பு மற்றும் ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவது குறித்த விடயங்களில் ஆலோசனைகளில் கவனம் செலுத்தப்பட்டன. குறிப்பாக, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறன்சார் அபிவிருத்திக்கான சுவிஸ் உதவி மற்றும் தேசிய ஆட்கடத்தல் எதிர்ப்புப் பணிக்குழுவுடன் (NAHTTF) ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இரு நாடுகளிலும் தற்போதைய புலம்பெயர்வு போக்குகள் மற்றும் உள்நாட்டு திறன்சார் அபிவிருத்திக் கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் அங்கீகரித்தல் மூலம் இலங்கை தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இலங்கை பிரதிநிதிகள் குழுவில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடத் தூதரகத்தின் பிரதிநிதிகளும் இருந்தனர். சுவிட்சர்லாந்து பிரதிநிதிகள் குழுவில், புலம்பெயர்வுக்கான இராஜாங்க செயலகம், மத்திய காவற்துறை அலுவலகம், கூட்டாட்சி வெளிநாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்கினர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஜூலை 29



