கொழும்பில் நடைபெற்ற 11வது இருதரப்பு அரசியல் கலந்தாய்வுகளில், பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான ஆலோசனை

கொழும்பில் நடைபெற்ற 11வது இருதரப்பு அரசியல் கலந்தாய்வுகளில், பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான ஆலோசனை

2026 ஏப்ரல் 2ஆம் திகதி, கொழும்பில் உள்ள இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில், இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான 11வது இருதரப்பு அரசியல் கலந்தாய்வுகள் கூட்டப்பட்டன. இரு தரப்பினரும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த அளவிலான உறவுகளை ஆய்வு செய்ததுடன், உறவின் வீச்சையும் ஆழத்தையும் மேம்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தனர்.

சுற்றுலா, கல்வி, பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, அத்துடன் விளையாட்டு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்த விவாதம் கவனம் செலுத்தியது. ரஷ்ய அரசாங்கத்துடனான தற்போதைய உரையாடலின் நீட்சியாக, எரிசக்தி, பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் உரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஆலோசனைகள் மேலும் கவனம் செலுத்தின. இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஈடுபாட்டை மேலும் உயர்த்தவும் அளவுகோலொன்றை நிர்ணயிக்க இரு தரப்பினரும் இணங்கினர். ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் இலங்கை முன்னாள் படைவீரர்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை நினைவு கூர்ந்த இரு தரப்பினரும், பல்தரப்பு மன்றங்களில் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் ஒத்துழைப்பதற்கான தங்கள் ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

2027 இல், இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியடைவதால், உயர் மட்டப் பயணங்கள் உள்ளிட்ட திட்டமிடப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் இந்த ஆண்டு நிறைவைச் சிறப்பாகக் கொண்டாட இரு தரப்பினரும் இணங்கினர்.

மேலும், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி அமைச்சர்   அன்ட்ரி ருடென்கோ, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தார். அப்போது, ​​இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதி ப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜவும், ரஷ்ய கூட்டமைப்பின் வெளிநாட்டு அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் அண்ட்ரி ருடென்கோவும் இக்கலந்தாய்வுகளுக்கு இணைத்தலைமை தாங்கினர். அந்தந்த வெளிநாட்டு அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகளும், இலங்கையில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01

2026, ஏப்ரல் 02     

 

Please follow and like us:

Close