
இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பர ரீதியில் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தை, இலங்கை அரசாங்கமும் இத்தாலி அரசாங்கமும் 2025 டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை இத்தாலியின் ரோமில் வைத்து முறையாகப் புதுப்பித்தன. இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோ, இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அதே நேரத்தில், இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சரும், துணைச் செயலாளருமான மரியா த்ரிபோடி, இத்தாலி அரசாங்கத்தின் சார்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படுவதானது, 2021 இல் ஒப்பந்தம் காலாவதியானதைத் தொடர்ந்து, இரு நாடுகளினதும் மோட்டார் போக்குவரத்து / போக்குவரத்து அதிகார சபைகளுக்கு இடையே ஒப்பந்தத்தினைப் புதுப்பிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைச் செயன்முறை வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிக்கிறது. சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தமானது, ஒவ்வொரு நாட்டிலும் நிரந்தர வதிவிட உரிமைப் பத்திரங்களை பெற்றவர்கள், தமது சாரதி அனுமதிப்பத்திரங்களை செல்லுபடியானதாக மாற்றுவதற்கு வழிவகுக்கிறது. இந்த ஒப்பந்தம் முதன்முதலில் இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையே 2011 இல் கைச்சாத்தானதுடன், 2021 இல் காலாவதியாகும் முன், 2016 இல் புதுப்பிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆறு ஆண்டுகளுக்குள் உரிய நாடுகளில் வசிப்போர், கோட்பாட்டு ரீதியிலான மற்றும் நடைமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே மற்ற நாட்டில் தங்களது தேசிய சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றிக்கொள்ள தகுதியுடையவர்களாகின்றனர். இந்த வசதியானது, மேம்பட்ட வேலை வாய்ப்புகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு சாத்தியங்களுக்கு உதவியுள்ளதுடன், இத்தாலியில் உற்பத்தித்திறன்மிக்க வெளிநாட்டு சமூகமாக அவர்களின் பங்களிப்பை எளிதாக்குகின்ற காரணத்தால், இத்தாலியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பாரிய எண்ணிக்கையிலான இலங்கை சமூகத்தினரால் பெரிதும் பாராட்டினைப் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஐந்து வருட காலத்திற்கு செல்லுபடியாகும். இரு அரசாங்கங்களாலும் அங்கீகரிக்கப்பட்டவுடன், இந்த ஒப்பந்தம் 60 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும். ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன் இரு தரப்பினரும் அறிவிப்பொன்றை வெளியிடுவார்கள்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025, டிசம்பர் 12





