இலங்கை மற்றும் சீனாவின் 12வது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள்  வெற்றிகரமாக  நிறைவு

இலங்கை மற்றும் சீனாவின் 12வது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள்  வெற்றிகரமாக  நிறைவு

2023 மே 30ஆந் திகதி, இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான 12வது  சுற்று இராஜதந்திர ஆலோசனைகளை வெற்றிகரமாக நிறைவுற்றன.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில், இலங்கையின் வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் ஆகியோரின் தலைமையில் இந்த ஆலோசனைகள் இடம்பெற்றன.

இருதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, தற்போதைய  பொருளாதார மீட்பு செயன்முறை, வாழ்வாதார உதவி மற்றும் நிதியுதவி, மக்கள் பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளுக்குமிடையேயான பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் கலந்துரையாடப்பட்டது.

ஒரு புதிய அபிவிருத்தி முன்னுதாரணத்திற்கு இட்டுச் செல்லும் சீனாவின் உயர் மட்ட  அபிவிருத்தியை விளக்குகையில், கடந்த நான்கு தசாப்தங்களில் நவீனமயமாக்கலுக்கான சீனாவின் பாதை மற்றும் மில்லியன் கணக்கான சீன குடிமக்களை வறுமையில் இருந்து வெற்றிகரமாக உயர்த்தியது ஆதலால், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனாவின் பிரதி அமைச்சர் சன் வெய்டாங், இலங்கையுடன் முடிவுகளை நோக்கிய ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு சீனா அளித்த உதவியைப் பாராட்டிய வெளியுறவுச்  செயலாளர் அருணி விஜேவர்தன, இலங்கையின் ஏற்றுமதியை சீனாவுக்கு, குறிப்பாக இலங்கை கறுவா, கடல் உணவு, பழங்கள் மற்றும் மரக்கறிகள் மற்றும் இரத்தினக் கற்கள் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதில் சீனாவின் ஆதரவைக் கோரினார். மேலும் அவர் இலங்கையின் பொருளாதார மீட்சியை விளக்கியதுடன் சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதை வரவேற்றார். இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மைக்காக இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இலங்கையும் சீனாவும் இந்த ஆலோசனைகளின் போது உறுதியளித்தன.

இந்த விஜயத்தின் போது பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

வருகை தந்த சீனப் பிரதிநிதிகள் இலங்கை - சீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின்  உறுப்பினர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலையும் மேற்கொண்டதுடன், தெவனகலவில் உள்ள இலங்கை - சீன நட்புறவுக் கிராமத்திற்கும் விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதியமைச்சர் கண்டியில் உள்ள புனித தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதுடன், மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரரையும் சந்திக்கவுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட  அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

2023 மே 31

Please follow and like us:

Close