அண்டை உறவுகளை வலுப்படுத்துவதிலான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான அரசியல் பணியக உறுப்பினரும், இராஜதந்திரியுமான யங் ஜீச்சி, சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரின் தலைவர் வங் சியாடாஓ மற்றும் சீன வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி ச்செங் சொங்டோ ஆகியோரை உள்ளடக்கிய சீனத் தூதுக்குழுவினரின் இலங்கைக்கான விஜயத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (9/10) வெளிநாட்டு அமைச்சு வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது.
வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் முன்னிலையில் கடந்த அக்டோபர் 9 ஆந் திகதி வெள்ளிக்கிழமை இந்த தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.
பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுகையில், இலங்கையில் 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியிலான சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களின் ஆக்கபூர்வமான வகிபாகம் மற்றும் குறித்த திட்டங்களினால் இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புக்கள் குறித்து தலைவர்கள் நினைவு கூர்ந்தனர். பாரியளவிலான இந்த அந்நிய நேரடி முதலீடுகளின் முழுமையான திறனிலிருந்து நாட்டில் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டங்களை முன்கூட்டியே நிறைவு செய்வதன் முக்கியத்துவத்தை தூதுக்குழுவினரும், அரசாங்கமும் குறிப்பாக சுட்டிக் காட்டின.
கோவிட் தொற்றுநோய் நிலைமையின் போது சீன அரசாங்கம் அளித்த மகத்தான ஆதரவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, சீன அரசாங்கத்தால் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற மதிப்புமிக்க உதவி மற்றும் ஆதரவுகளுக்காக தூதுக்குழுவிரிடம் தனது நன்றிகளைத் தெரிவித்தார். வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவு மற்றும் ஒற்றுமைக்காகவும், மனித உரிமைகள் பேரவையில் விசாரணை நேரங்களின் போதான சீனாவின் உறுதியான ஆதரவிற்காகவும் தலைவர்கள் தமது நன்றியைத் தெரிவித்தனர்.
இரு வழி வர்த்தகத்தை மீளாய்வு செய்கையில், வர்த்தக வருமானத்தை அதிகரிப்பதற்காகவும், சீனாவுக்கு ஆதரவான வர்த்தக சமநிலையை மேம்படுத்துவதற்காகவும், சீன உள்நாட்டு சந்தையில் கேள்வி நிலவக்கூடிய இலங்கையின் சில தனித்துவமான பொருட்களுக்கான சந்தை அணுகலை எளிதாக்குமாறு சீனத் தலைவர்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்தது. வர்த்தக அளவை அதிகரிப்பதற்காக சீனாவிற்கான ஏற்றுமதி நிலைமை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும், இலங்கை - சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த ஸ்தம்பிதமடைந்துள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் போது சீனத் தலைவர்களால் கொழும்புக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த முதலாவது விஜயமானது, சுகாதார அமைச்சின் காற்றுக் குமிழி (Air-Bubble) எண்ணக்கருவின் அடிப்படையிலான கண்டிப்பான சுகாதார நெறிமுறையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெளிநாட்டு அமைச்சுகொழும்பு
09 அக்டோபர் 2020