ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஈரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

 ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஈரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பையும் கூட்டாண்மையையும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஜி.எம்.வி. விஸ்வநாத் அபோன்சு ஈரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்திற்கு 2023 பெப்ரவரி 02ஆந் திகதி விஜயம் செய்தார்.  அவர் ஈரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான துணைத் தலைவர் பேராசிரியர் மெஹ்தி மொக்தடேயைச் சந்தித்து, இலங்கையில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஈரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் சாத்தியமான வழிகள் குறித்து கலந்துரையாடினார்.

ஈரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் பட்டப் படிப்புக்கள், தகுதிக்கான அளவுகோல்கள், விண்ணப்பிக்கும் முறை, பாடநெறிக் காலம், வெளிநாட்டு  மாணவர்களின் சேர்க்கை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவற்றை துணைத் தலைவர் விவரித்தார். ஈரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் தற்போது 13 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகத் தெரிவித்த அவர், இலங்கை மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கான விருப்பத்தையும் சாத்தியத்தையும் தெரிவித்தார். இலங்கை மாணவி ஒருவர் அண்மையில் ஈரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகவும், இலங்கையில் மருத்துவப் பட்டப்படிப்பை அங்கீகரிப்பதற்காக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் உதவியை நாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மருத்துவ சபையினால் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிக்கும் செயன்முறைகள் குறித்து தூதுவர் விளக்கமளித்த தூதுவர் அபோன்சு, ஈரான் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்புக்களைப் பின்பற்றுவதற்கு ஆர்வமுள்ள இலங்கை மாணவர்கள் எதிர்கொள்ளும் சில சிரமங்களைத் தவிர்த்து, தமது பல்கலைக்கழகத்தின் பதிவு செயன்முறையை விரைவுபடுத்துமாறு ஈரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை விடுத்தார். மேலும், ஈரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் குறிப்பாக வைத்தியர் படிப்பதற்காக இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை  ஆராயுமாறு தூதுவர் துணைத் தலைவர் மொக்தடேயிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைத் தூதுவரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர், அடுத்த கல்வியாண்டில் இலங்கை  மாணவர்களுக்கு சில புலமைப்பரிசில்களை வழங்குவது குறித்து பரிசீலிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

ஈரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆக்கபூர்வமான கலந்துரையாடலைப்  பாராட்டிய தூதுவர் அபோன்சு, உயர்கல்வி மூலம் ஈரான்-இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு இது ஒரு முக்கியமான படியாகும் எனக் குறிப்பிட்டார்.

இலங்கைத் தூதரகம்,

தெஹ்ரான்

2023 பிப்ரவரி 23

Please follow and like us:

Close