சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஜூன் 8 – 9ஆந் திகதிகளில் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். நான்கு வருடங்களின் பின்னர் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஒருவரின் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறவுள்ளது.
இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றதனைத் தொடர்ந்து அமைச்சர் பீரிஸுக்கு உத்தியோகபூர்வ மதிய உணவு விருந்தளிக்கப்பட்டது. 2022 ஜூன் 13ஆந் திகதி சிங்கப்பூரின் துணைப் பிரதமராக பதவியேற்கவிருக்கும் சிங்கப்பூரின் நிதி அமைச்சர் லோரன்ஸ் வோங்கையும் அமைச்சர் பீரிஸ் சந்தித்தார். சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மற்றும் பல முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து, சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு ஜூன் 8ஆந் திகதி மதிய உணவு விருந்தளித்தார்.
சிங்கப்பூர் தரப்புடனான கலந்துரையாடலின் போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கான நிதியுதவியைப் பெறுவதற்கும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கும், சிங்கப்பூருக்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உதவி கோரினார். சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவையும் அமைச்சர் கோரினார். தற்போது, சிங்கப்பூருக்கு சுகாதாரப் பணியாளர்களை குறிப்பாக செவிலியர்களை அனுப்புவதில் இரு நாடுகளும் நெருக்கமாக செயறபட்டு வருகின்றன.
அமைச்சர் பீரிஸ், சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சரும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகத்தை சந்தித்துப் பேசிய அதே வேளை, சிங்கப்பூரின் சுகாதார மற்றும் மனிதவள சிரேஷ்ட இராஜாங்க அமைச்சர் கலாநிதி. கோ போ கூன், இலங்கைக்கான சிங்கப்பூரின் வதிவிடமற்ற உயர்ஸ்தானிகர் சந்திர தாஸ், டெமாசெக் சர்வதேச அறக்கட்டளையின் தலைமை நிறைவேற்று அதிகாரியும், டெமாசெக் குழுமத்தின் துணைத் தலைவருமான (ஆசியா) பெனடிக்ட் சியோங் மற்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த உரையாடல்களின் போது, தேவையான மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதன் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு பிரதிபலிப்பை ஆதரிக்கும் வகையில் கோவிட்-19 தொற்றுநோய் முழுவதும் நீட்டிக்கப்பட்ட விரிவான உதவிகளுக்காகவும், சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளில் டெமாசெக் மூலம் இலங்கை முகமூடிகளை உற்பத்தி செய்து, விநியோகச் சங்கிலியின் இடையூறுகளைச் சமாளிப்பதற்கு ஒத்துழைத்தமைக்காகவும், சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் டெமாசெக் சர்வதேச அறக்கட்டளை ஆகியவற்றிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் நன்றி தெரிவித்தார். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மனிதாபிமான உதவிக்காக அண்மையில் செய்த வேண்டுகோளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலர்களை உறுதியளித்ததற்கும் அமைச்சர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். செஞ்சிலுவைச் சங்கத்தின் முறையீட்டின் முதல் மருத்துவப் பொருட்கள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளன.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயத்திற்கான தூதுக்குழுவில் உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தன, சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் டி.என். கம்லத் மற்றும் இலங்கை தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவர் ஆகியோர் இடம்பெற்றருந்தனர்.
உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் 2022 ஜூன் 10-11 வரை நடைபெறவுள்ள ஐ.ஐ.எஸ.;எஸ்.-ஷாங்க்ரி-லா உரையாடல் 2022இல் கலந்துகொள்ளவுள்ளார். சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்த உத்தியோகபூர்வ விஜயம் ஒருங்கிணைக்கப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஜூன் 10