கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை இலங்கை நிராகரிப்பு

கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை இலங்கை நிராகரிப்பு

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் தமிழர் இனப்படுகொலை குறித்த பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மே 18ஆந் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்தமை குறித்து இலங்கை அரசாங்கம் வருத்தம் வெளியிடுகின்றது. 'இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதாகக் கண்டறியவில்லை' என்ற கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணாக, இலங்கை குறித்த நாடாளுமன்றப் பிரேரணையில் உள்ள இனப்படுகொலை பற்றிய அப்பட்டமான பொய்யான குற்றச்சாட்டை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்த அதே வேளையில், மோதலின் இறுதிக்கட்டத்தின் போது முன்னாள் மோதல் வலயங்களில் உள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கையின் உண்மையான நிலைமை குறித்து கனேடிய அரசாங்கத்திற்கு உயர் மட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டமை நினைவுகூரத்தக்கது. இன்று, மோதல் முடிவடைந்து 13 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை தனது நல்லிணக்கச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதுடன், அது தொடர்பிலும் கனேடிய அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றது.

இனப்படுகொலை என்ற வார்த்தைக்கு குறிப்பிட்ட சட்டப்பூர்வ அர்த்தங்கள் இருப்பதாகவும், ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட அதன் எந்தவொரு அரசாங்கத்திற்கும் இடையிலான அமைப்புக்களாலும் இலங்கை மோதல்கள் தொடர்பாக அந்த சொற்பிரயோகம் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகின்றது. இலங்கையின் நலன்களுக்கு விரோதமான புலம்பெயர் நாடுகளில் உள்ள சிறுபான்மை அரசியல் உந்துதல் கொண்ட இலங்கை எதிர்ப்புக் கூறுகளால் மட்டுமே இலங்கையின் நிலைமைக்கு இச்சொல் தன்னிச்சையாகவும் பிழையாகவும் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவரும் பாரிய சவால்களை இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள அதேவேளையில் சர்வதேச சமூகத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை எதிர்பார்த்து நிற்குமொரு தருணத்தில் கனேடிய நாடாளுமன்றத்தால் இத்தகைய தவறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை வருத்தமளிக்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 மே 19

Please follow and like us:

Close