கூட்டு ஊடக அறிக்கை: தாய்லாந்து இராச்சியத்தின் பிரதமர் அதிமேதகு ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா அவர்களின் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம், 2018 யூலை 12 - 13

கூட்டு ஊடக அறிக்கை: தாய்லாந்து இராச்சியத்தின் பிரதமர் அதிமேதகு ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா அவர்களின் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம், 2018 யூலை 12 – 13

Pic 1

தாய்லாந்து இராச்சியத்தின் பிரதமர் அதிமேதகு ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா அவர்களும், அவரது தூதுக்குழுவினரும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பின் பேரில், 2018 யூலை 12 தொடக்கம் 13ஆந் திகதி வரையான காலப்பகுதிக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கு மேற்கொண்டிருந்தனர்.

2018 யூலை 12ஆந் திகதி தாய்லாந்து பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் அரசியல், பொருளாதார, தொழினுட்ப, விவசாய, மீன்பிடி, கலாசார, சமய, சுற்றுலாத்துறை, பிராந்திய மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கிய பரந்த விடயங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்ச்சியான நெருக்கமானதும், சுமூகமானதுமான உறவுகள் தொடர்பில் இரு தலைவர்களும் திருப்தியடைந்து கொண்டனர். தற்போதைய உறவுகளை உயர்ந்த மட்டத்திலான மூலோபாய பொருளாதார பங்குடைமைக்கு எய்திக் கொள்வதற்கான ஈடுபாட்டினை இரு தரப்பினரும் மீள உறுதிப்படுத்தினர். இந்த கலந்துரையாடல்களின் போது, 2015 நவம்பர் மாதத்தில் ஜனாதிபதியினால் தாய்லாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் வெற்றிகரமான வெளிப்பாடுகளை இரு தலைவர்களும் மீள நினைவுகூர்ந்து கொண்டனர்.

இரண்டு நாடுகளினதும் நீண்ட வரலாற்று, சமய மற்றும் கலாசார ரீதியிலான உறவுகளை குறித்து நிற்கும் வகையில், மாண்புமிகு அரசர் மஹா வஜிரலொங்கோர்ன் போதிந்திர டெபயபவரங்குன் அவர்களின் அரசாட்சியையும், தாய்லாந்து இராச்சியத்தின் மக்களையும் ஆசீர்வதிப்பதற்கான நல்லெண்ணத்தின் சைகையாக ஸ்ரீ மஹா போதியின் மரக்கன்று ஒன்றினை வழங்குவதற்கு விரும்புவதாக இலங்கை ஜனாதிபதி அவர்கள் தாய்லாந்து பிரதமரிடம் வலியுறுத்திக் கூறினார். இந்த சலுகையை தாய்லாந்து பிரதமர் நன்றியுடன் வரவேற்றதுடன், புனிதமான பரிசளிப்பு விழாவிற்கான முறையான ஏற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காக தேவையான தயார்நிலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் தொடர்பில், நியாயமான வர்த்தக நிலுவையை அடைந்து கொள்வதுடன் சேர்த்து, இருபக்க வர்த்தக அளவினை 2020ஆம் ஆண்டளவில் 1.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக அதிகரித்துக்கொள்வதற்கான தமது ஈடுபாட்டினை இரண்டு தலைவர்களும் மீள உறுதிப்படுத்தினர். இரண்டு நாடுகளுக்குமிடையிலான முதலீட்டுப் பாய்ச்சலை மேம்படுத்துவதற்கான தேவைப்பாடு தொடர்பில் இரு தரப்பினரும் மேலும் உடன்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தில், தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை தாபிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இரு தலைவர்களும் கூட்டு அங்குரார்ப்பணம் செய்தனர். எதிர்பார்க்கப்படும் இலக்குகளை இந்த சுருக்கமான ஆவணத்தினால் அடைந்து கொள்வதற்கான உறுதிப்பாட்டினை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர். இதன் முதலாம் சுற்று பேச்சுவார்த்தைகள் 2018 யூலை 13ஆந் திகதி கொழும்பில் இடம்பெற்றன.

முக்கியமான பத்து துறைகளில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கியமான பொறிமுறையாக செயற்படவுள்ள மூலோபாய பொருளாதார பங்குடைமை தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டமைக்கு இரு தலைவர்களும் சாட்சிகூர்ந்தனர். இந்த விடயத்தில், இலங்கையில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தகதம் சார்ந்த விடயங்களிலான அடுத்த தாய்லாந்து - இலங்கை உப குழுக் கூட்டத்தில் கூட்டு செயற்பாட்டு திட்டத்தினை வரைவு செய்வதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.

தாய்லாந்து நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்காக கொண்டிருக்கும் முனைப்பான ஆர்வம் தொடர்பில் தாய்லாந்து பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்தார். அவர்களது ஆர்வத்தினை இலங்கை ஜனாதிபதி வரவேற்றதுடன், தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு மேலும் அதிகமான முதலீடுகளை மேற்கொள்வதனை ஊக்குவித்து, வசதியளிப்பதற்கு தேவையான வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பில் இரண்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

தொழினுட்ப ஒத்துழைப்பு விடயம் தொடர்பில், 'இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் தன்னிறைவு பொருளாதார தத்துவத்தை பயன்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்ட பேண்தகு சமூக அபிவிருத்தி மாதிரியின் மீதான ஒத்துழைப்பிற்கான இணைந்த நடவடிக்கை நிகழ்ச்சித்திட்டத்திற்கு' கைச்சாத்திடப்படுவதனை இரு தரப்பினரும் சாட்சி கூர்ந்தனர். காலஞ்சென்ற மாண்புமிகு மன்னர் பூமிபொல் அதுல்யதேஜ் அவர்களின் தன்னிறைவு பொருளாதார தத்துவத்தினை இலங்கையில் பயன்படுத்துவதனை விரிவாக்குவதற்கு இந்த இணைந்த நடவடிக்கை நிகழ்ச்சித்திட்டத்தினால் எதிர்பார்க்கப்படுகின்றது. கிராமிய சமுதாயங்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை மேலும் அதிகரிப்பதற்கு இந்த இணைந்த ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க வகையில் உதவுவதாக அமையும்.

நீர்மின் உற்பத்தி தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், விவசாய காரணிகளுக்கு அவசியமான நீர்ப்பாசனத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் மழையை உற்பத்தி செய்யும் தொழினுட்பத்திற்காக ரோயல் தாய் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தொழினுட்ப உதவிகளுக்கு இலங்கை ஜனாதிபதி தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். இரண்டு நாடுகளையும் சேர்ந்த விவசாயத்துறை நிபுணர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மேலும் தனது திருப்தியை வெளிப்படுத்தியதுடன், இலங்கையின் விவசாயத் துறையில் சாத்தியமான நவீனமயப்படுத்தல்களை கண்டறிவதற்காக பகிரப்பட்ட நிபுணத்துவத்திற்காக தாய்லாந்து பிரதமருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்வதற்காக, சம்பந்தப்பட்ட இணைந்த தொழிற்குழுக்களை கூட்டுவதன் முக்கியத்துவத்தினை இனங்காணும் போது, எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பான பிரேரணைகளை பரிமாற்றிக் கொள்வதற்கு இரண்டு தரப்பினரும் முக்கியத்துவம் வழங்குவதாக இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர்.

அத்துடன், தாய்லாந்து இராச்சியம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஆகியவற்றுக்கு இடையிலான குற்றவாளிகளை பரிமாற்றிக்கொள்ளுதல் மற்றும் குற்றவியல் தண்டனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு தொடர்பிலான உடன்படிக்கை மற்றும் கசெட்சார்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆரம்ப உற்பத்திகளுக்கு பெறுமதி உட்சேர்த்தலை மேற்கொள்வதுடன் தொடர்பான தொழினுட்ப ஒத்துழைப்பு மீதான ஆரம்ப தொழிற்துறைகள் அமைச்சு ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியன கைச்சாதிடப்படுவதற்கு இரண்டு தலைவர்களும் சாட்சி கூர்ந்தனர். தாய்லாந்து வணிக சபை மற்றும் இலங்கை வணிக சபை ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையும் நிறைவு செய்யப்பட்டது.

சந்திப்பினைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதி அவர்கள் தாய்லாந்து பிரதமர் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு கௌரவ விருந்தொன்றினை ஜனாதிபதி இல்லத்தில் வழங்கினார். அடுத்த நாள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தாய்லாந்து பிரதமர் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கான காலை விருந்துபசாரத்துடன் கூடிய சந்திப்பொன்றினை ஒழுங்குபடுத்தினார்.

தாய்லாந்து பிரதமர் வரலாற்று நகரமான கண்டிக்கு விஜயம் செய்ததுடன், புனித தந்ததாதுக்களுக்கு மரியாதை செலுத்தினார். சியம் பிரிவின் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அதி வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்களையும் அவர் சந்தித்தார். மேலும், தாய்லாந்து பிரதமர் பேராதனையிலுள்ள ரோயல் தாவரவியல் பூங்காவிற்கு விஜயம் செய்ததுடன், இலங்கைக்கான தனது விஜயத்தின் அடையாளமாக மரக்கன்று ஒன்றினை அங்கு நட்டார்.

பரஸ்பர பயனுள்ள பொருளாதார பிணைப்புக்களால் வளர்ச்சியடைந்த பகிரப்பட்ட வரலாற்று, சமய மற்றும் கலாசார உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த வெற்றிகரமான உயர்மட்ட விஜயமானது தாய்லாந்திற்கும், இலங்கைக்கும் மற்றும் அதன் மக்களுக்குமிடையிலான காலவரையறையற்ற பங்குடைமையை பிரதிபலிப்பதாக அமைகின்றது.

2018 யூலை 13

Pic 2

Pic 3

Pic4

Temple of Tooth

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close