ஐக்கிய இராச்சியத்துடனான இலங்கையின் நெருக்கமான மற்றும் நல்லுறவுகளைத் தொடர்வது  விரும்பத்தக்கதும், சாத்தியமானதுமாகும்

 ஐக்கிய இராச்சியத்துடனான இலங்கையின் நெருக்கமான மற்றும் நல்லுறவுகளைத் தொடர்வது  விரும்பத்தக்கதும், சாத்தியமானதுமாகும்

ஐக்கிய இராச்சியத்திற்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை கொழும்பில் செவ்வாய்க்கிழமை (28) வரவேற்ற  இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அவருடன் திறந்த மற்றும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். அமைச்சர் பீரிஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான உயர்ஸ்தானிகர் ஆகிய இருவரும் இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சருடனான முந்தைய தொடர்புகளைப் பின்தொடர்ந்து, நியூயோர்க்கில் நடைபெற்ற 76வது ஐ.நா. பொதுச்சபை அமர்வின் பக்க அம்சமாக, ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாய அமைச்சர் தாரிக் அஹ்மத் பிரபுவுடனான நட்புறவு ரீதியான சந்திப்பு குறித்து இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கையின் புலம்பெயர்ந்தோருடன் ஈடுபடுவதற்கும், இலங்கையின் சமகால முன்னேற்றங்கள் குறித்த மிகவும் யதார்த்தமான புரிதலை உருவாக்குவதற்கும் பிரபு  அஹமத் அவர்களின் முயற்சிகளின் பின்னணியில் இந்த உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்தது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஐக்கிய இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சரினால் 2021ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படுவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள விஜயத்தினால் இது மேலும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள உள்நாட்டு நல்லிணக்க நடவடிக்கைகளை வளர்ப்பதற்கும்  மேம்படுத்துவதற்குமான அண்மைய முயற்சிகள் உட்பட எதிர்கால இலங்கை - ஐக்கிய இராச்சிய இருதரப்பு உறவுகளைப் பாதிக்கும் பல முக்கிய பகுதிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம், காணாமல்போன நபர்கள், பொறுப்புக்கூறல் மற்றும் இழப்பீடு ஆகியவற்றைக் கையாளும் நிறுவனங்களின் பணிகளும் இந்தக் கலந்துரையாடல்களில் உள்ளடங்கும். தற்போதைய ஆர்வமும் கவனமும் கொண்ட குறிப்பிட்ட சில உயர் வழக்குகள் தொடர்பான கேள்விகளை உயர்ஸ்தானிகர் ஹல்டன் எழுப்பினார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் பின்னணியில் இந்த விடயங்களில் சிலவற்றுக்கு கவனம் செலுத்தப்பட்டன.

இலங்கையில் ஐக்கிய இராச்சியத்தினால் மேற்கொள்ளப்படும் வணிகங்களுக்கான மேம்பட்ட வர்த்தகம் மற்றும்  முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும், துறைமுக நகர அபிவிருத்தியில் காணப்படுகின்ற புதிய வாய்ப்புக்கள் குறித்தும் அமைச்சர் பீரிஸ் மற்றும் உயர்ஸ்தானிகர் ஹல்டன் ஆகியோர் கலந்துரையாடினர். உள்ளக பொதுநலவாய வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவிருக்கும் சி.ஓ.பி.26 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் சூழலில் உலகளாவிய சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கு ஆதரவாக இலங்கையின் நேர்மறையான உறுதிப்பாடுகள் மற்றும் இந்த துறையில் அதன்  தற்போதைய முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான, நீண்டகால, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நீடித்த  உறவுளைப் பாராட்டிய அமைச்சர் பீரிஸ், பலனளிக்கும் மற்றும் உற்பத்திகரமான கூட்டாண்மையைத் தொடர்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 செப்டம்பர் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close