ஆட்கடத்தலை எதிர்ப்பதற்கான ஒத்துழைப்பை இலங்கையும், அவுஸ்திரேலியாவும் வலுப்படுத்துகின்றன

ஆட்கடத்தலை எதிர்ப்பதற்கான ஒத்துழைப்பை இலங்கையும், அவுஸ்திரேலியாவும் வலுப்படுத்துகின்றன

 

Photo (1)

கடந்த 2019 மே மாதம் முதல் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் முயற்சிகளின் அதிகரித்த எண்ணிக்கைக்கு தீர்வு காண்பதற்காக, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா, ஆட்கடத்தலை எதிர்ப்பதற்காக தங்களை மீண்டும் அர்ப்பணித்து, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான வழிகள் குறித்து கலந்துரையாடின.

2019 செப்டம்பர் 03 ஆந் திகதி அவுஸ்திரேலியாவின் இணைந்த பணிக்குழுவின் இறையாண்மை எல்லைகள் செயற்பாட்டின் தளபதி மேஜர் ஜெனரல் கிரெய்க் ஃபுரினி தலைமையிலான தூதுக்குழுவுடன் இடம்பெற்ற ஆட்கடத்தல் மற்றும் ஆட்கடத்தலை எதிர்ப்பதற்கான கூட்டத்தின் போது, இலங்கையின் கரையோரத்திலிருந்து உருவாகும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை குறைப்பதற்கு முழுமையான ஆதரவை அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை வழங்குவதாக வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார். சட்டவிரோத இடம்பெயர்வு சம்பந்தப்பட்ட அபாயங்கள் குறித்து அறிவூட்டி பொதுமக்களின் கருத்தை மாற்றுவதற்கான இலக்குப் பிரச்சாரங்கள் உட்பட நிலையான மற்றும் நீண்டகால உத்திகளை கூட்டாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வெளிவிவகார செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.

2013 செப்டம்பரில் அமைக்கப்பட்ட 'இறையாண்மை எல்லைகள் செயற்பாட்டுக் கொள்கை' காரணமாக, படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைவதற்கு 'பூஜ்ஜிய வாய்ப்பு' ஏற்பட்டுள்ளதாகவும், கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் மேஜர் ஜெனரல் ஃபுரினி குறிப்பிட்டார். ஆட்கடத்தலுக்கு திறம்பட பதிலளிப்பதற்காக பிரச்சினையின் மூல காரணத்தை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்க தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத இடம்பெயர்வுகளை எதிர்கொள்வதற்கான இலங்கையின் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்காக, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொல்லி, அவுஸ்திரேலியாவின் மக்கள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தலுக்கான தூதுவர் ப்ரைஸ் ஹச்செஸ்ஸன் மற்றும் அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையின் தேசிய மறுமொழி நடவடிக்கைகளின் முகாமையாளர் தளபதி ஜேசன் வில்லியம்ஸ் ஆகியோர் உள்ளடங்கலான அவுஸ்திரேலிய தூதுக்குழு, இலங்கை அரசுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டது.

ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த எல்லைக் குற்றங்களை எதிர்ப்பதில் வெற்றிகரமாக செயற்படுத்தப்படும் வகையில், இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஒரு உறுதியான கூட்டாண்மையைக் கொண்டுள்ளன. ஆட்கடத்தலை எதிர்ப்பதில் இலங்கை தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு மதிப்புமிக்க ஆதரவை அளித்து வருகிறது. மக்கள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் எதிர்ப்பு ஒத்துழைப்பை நிவர்த்தி செய்வதற்கான பிரதான மன்றமாக விளங்கும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்கள் கூட்டு செயற்குழுவானது 2018 அக்டோபர் 17 ஆந் திகதி அன்று இலங்கையில் நடைபெற்றது. ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்கள் கூட்டுச் செயற்குழுவின் அடுத்த சுற்று கென்பெர்ராவில், 2019 அக்டோபர் 11 ஆந் திகதி நடைபெறும்.

கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் தமயந்தி ராஜபக்ஷ, சர்வதேச பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹிமாலி அருணாதிலக, பொது இராஜதந்திர பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் ருவந்தி தெல்பிட்டிய, உதவிச் சட்ட ஆலோசகர் சஞ்சிகா கம்மனங்கட மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தொடர்புடைய அதிகாரிகள் இப் பேச்சுவார்த்தையின் போது வெளிவிவகார செயலாளருடன் இணைந்திருந்தனர்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

05 செப்டம்பர் 2019

Please follow and like us:

Close