
ஐக்கிய அரபு இராயச்சியத்தின் துணைப் பிரதமரும், வெளிநாட்டு அலுவலகள் அமைச்சருமான ஷெய்க் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், 2025 ஏப்ரல் 22 அன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
2025 உலக அரசாங்களுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2025, பெப்ரவரி 10 முதல் 13 வரையில், ஐக்கிய அரபு இராச்சியத்தினற்கு விஜயமளித்திருந்ததைத் தொடர்ந்து இவ்விஜயம் இடம்பெற்றது.
இவ்விஜயத்தின் போது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைப் பிரதமரும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான அவர் இன்று (2025, ஏப்ரல் 22) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடனும் பயனுதிறு மிக்கதொரு இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
அமைச்சர் ஹேரத்துடனான கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பை மென்மேலும் விருத்தி செய்தல், ஐக்கிய அரபு இராச்சியத்தின் முயற்சியாளர்களுக்கு இலங்கையில் நிலவும், முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹேரத், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வணிகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இலங்கையை தமது விருப்பமான தெரிவொன்றாகக் கருதுமாறு அழைப்பு விடுத்தார். மின்சாரம் மற்றும் எரிசக்தி, சுத்திகரிப்பு, மருந்துகள், தகவல் தொழில்நுட்பத் துறை, ஆடைக்கைத்தொழில் மற்றும் புடவையுற்பத்தி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைப் பிரதமரும் வெளளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான ஷெய்க் அப்துல்லா, இலங்கை அடைந்துள்ள ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தைப் பாராட்டியதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காக இலங்கை சரியான திசையில் நகர்கிறது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியமானது, இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாவதுடன், இருநாட்டு மக்களிடையே நல்லுறவு பேணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்; இது மக்களுக்கு இடையேயான தொடர்புகள் மூலம் தெளிவாகிறது. எரிசக்தி, சுற்றுலா மற்றும் உணவுத் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மென்மேலும் விருத்தி செய்வதில் அவர் ஆர்வம் காட்டினார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை நிபுணர்கள் மற்றும் பகுதித் திறமை கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடலின் போது ஆலோசிக்கப்பட்டது.
திருகோணமலையை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதில், ஒத்துழைப்புக்கான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானதை ஷெய்க் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் பெரிதும் வரவேற்றதுடன், இவ்வொத்துழைப்பானது, மூன்று நாடுகளிடையேயும் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை பாரியளவில் வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு இராச்சியம் - இலங்கை கூட்டு வணிக மன்றம் நிறுவப்படுதல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு அமைச்சர்களும் கைச்சாத்திட்டனர். இது இரு நாடுகளின் வணிக சமூகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேழும் விரிவுபடுத்த வழியமைக்கும் என்பது நிச்சயம்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஏப்ரல் 22





