இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஏழாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் இன்று (30) இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சில் வெற்றிகரமாக நிறைவடைந்தன. மூன்று ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்த ஆலோசனைகள் நடத்தப்பட்டன. ஆறாவது சுற்று 2020 டிசம்பரில் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டது.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலைமையை விரிவாக மீளாய்வு செய்யும் இவ்வாலோசனைகள் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் பாகிஸ்தானின் வெளிவிவகாரச் செயலாளர் முஹம்மட் சிரஸ் சஜ்ஜாத் க்வாஸீ ஆகியோரின் இணைத்தலைமையில் நடத்தப்பட்டது.
இவ்வுரையாடல்களில், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி, கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு, தூதரக விவகாரங்கள், விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் இடம்பெற்றன.இரு தரப்பினரும் பலதரப்பு மற்றும் பிராந்திய அரங்குகளில் தங்களின் ஒத்துழைப்பைப் பற்றி கலந்துரையாடியதுடன், குறிப்பாக பலதரப்பு மன்றங்களில் பல ஆண்டுகளாக இலங்கைக்கு அளித்து வரும் உறுதியான ஆதரவிற்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழு பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தது.
கடன்சார் நிதி நிலைமையில் ஏற்பட்ட நெருக்கடியை ஸ்திரப்படுத்துவதில் இலங்கையின் தலைமையையும் மக்களையும் பாராட்டிய பாகிஸ்தான் தூதுக்குழு, இலங்கையின் அனுபவத்திலிருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொள்ள முடியுமெனக் குறிப்பிட்டது.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் உயர்மட்ட அரசியல் பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை இலங்கையும் பாகிஸ்தானும் வலியுறுத்தின. இந்நிலையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பாகிஸ்தானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான குறிப்பாக வான்வழி இடைத்தொடர்பை மேம்படுத்துவதனூடாக பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கு, தொடர்புகள் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். மத, கலாச்சார, மற்றும் விளையாட்டு இணைப்புகள் மூலம் சுற்றுலா மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை மேலும் மேம்படுத்த முடியும். இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் போதைப்பொருள் கடத்தல் போன்ற நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இச்சந்திப்பின் நிறைவில், இலங்கையின் நீண்ட கால பாரம்பரியத்திற்கு அமைவாக, இலங்கை கண் தான சங்கத்தினால் வழங்கப்பட்ட ஐந்து கண் கருவிழிகளை, பாகிஸ்தானின் வெளிவிவகார செயலாளரிடம் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன கையளித்தார்.
இவ்வாலோசனைகளுக்கான இலங்கையின் தூதுக்குழுவில் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அட்மிரல் ரவீந்திர சி. விஜேகுணரத்ன, வெளிவிவகார அமைச்சு மற்றும் இஸ்லாமாபாத்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தித்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் அடங்குவர். வெளிவிவகார செயலாளர் முஹம்மது சைரஸ் சஜ்ஜாத் க்வாஸீ தலைமையிலான பாகிஸ்தான் தரப்பில் பாகிஸ்தானின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மூத்த அதிகாரிகள் இருந்தனர்.
இலங்கை -பாகிஸ்தான் இருதரப்பு அரசியல் ஆலோசனையின் அடுத்த சுற்றானது, இருதரப்பினராலும் பரஸ்பரமாக இணங்கும் திகதியொன்றில் கொழும்பில் நடைபெறும்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 ஜூலை 30