இரண்டாவது இலங்கை - ஐக்கிய இராச்சிய மூலோபாய உரையாடல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் 2024, மே 07 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் ஷோபினி குணசேகர மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் தரப்பில், இந்திய மற்றும் இந்து சமுத்திரத்திற்கான சர்வதேச பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் பணிப்பாளர் பென் மெல்லர் ஆகியோர் தலைமை வகித்தனர். பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, வெளிநாடு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுடனும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது,
கலந்துரையாடலின் போது பிரதிநிதிகள் 75 வருட கால இராஜதந்திர உறவுகள், உயர்மட்ட வருகைகளின் மூலமான வழக்கமான பரிமாற்றம் ஆகியவற்றின் சுமூகமான தொடர்புகளை நினைவு கூர்ந்தனர். இரு தூதுக்குழுக்களும் உலக அரங்கில் உருவாகி வரும் இயக்கவியல் மற்றும் பன்முகத்தன்மைக்கான பரஸ்பர அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பின்னணியில் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை முன்னுரிமைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும், தற்போதைய பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் கூடுதல் உதவி மற்றும் ஒத்துழைப்புடன், ஏற்றுமதியை விரிவுபடுத்துவது உட்பட, சலுகை வர்த்தக வசதிகள், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக முறைமையின் கீழ் வர்த்தகத்தை அதிகப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத்துறையில் காணப்பட்ட வளர்ச்சியை அவதானித்த்துடன் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கைகளை இங்கிலாந்துக்கு விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.
இரு தூதுக்குழுவினரும், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன் மேலும் இவ்விடயத்திலும் ஒத்துழைப்பிற்கான தேவையை அறிந்தனர். நாட்டில் கடல்சார் விஞ்ஞான நிபுணத்துவத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பெருங்கடல் நாட்டு கூட்டுத் திட்டத்தின் ஊடாக ஐக்கிய இராச்சியத்தின் ஒத்துழைப்பை இலங்கை பாராட்டியது. கடல்கடந்த காற்றுச் சாலை வரைபடம் குறித்து இலங்கை விளக்கமளித்ததுடன், இவ்விடயத்தில் ஐக்கிய இராச்சியத்தின் நிபுணத்துவத்துடன் ஒத்துழைப்பின் சாத்தியப்பாடு குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
சுகாதாரத் துறை உட்பட சட்டப்பூர்வ இடம்பெயர்வு வழிகளை எளிதாக்குவதன் அவசியம் குறித்து இரு பிரதிநிதிகளும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இரு நாடுகளின் நீர்ப்பரப்பு அலுவலகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முன்கூட்டிய முடிவில் கவனம் செலுத்துகின்ற கடல்சார் ஒத்துழைப்பின் விரிவாக்கம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. சர்வதேச அரங்கில், குறிப்பாக ஐக்கிய நாடுகள், பொதுநலவாய நாடுகள் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் ஆகியவற்றில் கல்வி ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பேட்ரிக் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் பல அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அடுத்த உரையாடல் 2025 இல் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 மே 07