இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான மூலோபாய உரையாடலின் இரண்டாவது சந்திப்பு, மே 07, 2024 அன்று, கொழும்பில் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மட்டுமல்லாமல், வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இடப்பெயர்வு, ஏனைய கடல்சார் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகிய துறைகளில், இருதரப்பு ஈடுபாட்டின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகள் உட்பட சர்வதேச அரங்குகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்படும்.
இலங்கையும் ஐக்கிய இராச்சியமும், 2023 இல் இராஜதந்திர உறவுகளின் 75வது வருட பூர்த்தியைக் கொண்டாடின. இதனை நினைவுகூரும் வகையில், முடிக்குரிய இளவரசி ஆன் வருகை தந்தமையானது, இரு நாடுகளுக்கிடையிலான நீடித்த நட்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மூலோபாய உரையாடல்களின் 2 ஆவது அமர்வின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர்நாயகம் ஷோபினி குணசேகர தலைமை வகிப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுடனான இருதரப்புப் பேச்சுவார்த்தையும் உள்ளடங்கும். உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக், சர்வதேச பொதுநலவாய மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகத்தின், இலங்கை அணித்தலைவர் ஹுமைரா ஹைட்டா, உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடன் கூடிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய அரசு நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய இராச்சியத்தின் தரப்பிற்கான, தலைமைத்துவத்தை, இந்தியா மற்றும் இந்து சமுத்திரத்திற்கான பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் பென் மெல்லர் வகிக்கவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 மே 03