கோவிட்-19 தொற்றுநோய் நிலைமை காரணமாக இராச்சியத்தை விட்டு வெளியேற முடியாத, வருகை தரு வீசாக்கள், மீள் நுழைவு வீசா அல்லது இறுதி வெளியேற்ற வீசா போன்ற அனைத்து வகையான செல்லுபடியாகும் அல்லது காலாவதியான வீசாக்களையுடைய எந்தவொரு புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளியும் எந்தவொரு கட்டணமும் அறவிடப்படாது விமான நிலையங்களின் குடிவரவு மையங்களின் வழியாக வெளியேறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளின் அடிப்படையில் சவுதி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கை இதுவாகும்.
சவுதி அரேபிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானமானது தற்போது நாட்டிற்கு மீளத் திரும்புவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்குகின்றது. இரு நாடுகளும் தற்போது அனுபவித்து வரும் வலுவான இருதரப்பு உறவுகளை இந்தத் தீர்மானம் குறித்து நிற்கும் அதே வேளை, இலங்கையின் வெளிநாட்டு அமைச்சு மற்றும் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியன சவுதி அதிகாரிகளுடன் கொண்டுள்ள செயலூக்கமான ஈடுபாட்டினை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. கோவிட்-19 தொற்றுக் காலத்தில் புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை வழங்குவதில் உதவிகளை வழங்கியமைக்காக சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு பாராட்டுகளைத் தெரிவிப்பதற்காக இலங்கை அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
07 செப்டம்பர் 2020