2024 ஒக்டோபர் 14, முற்பகல் 10.30 மணியளவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரப் படையணியுடனான கலந்துரையாடலில் இடம்பெற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ. விஜித ஹேரத் அவர்களது கருத்துரைகள்.

2024 ஒக்டோபர் 14, முற்பகல் 10.30 மணியளவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரப் படையணியுடனான கலந்துரையாடலில் இடம்பெற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ. விஜித ஹேரத் அவர்களது கருத்துரைகள்.

உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொழும்பில் உள்ள சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர்களே,

காலை வணக்கம்!

எனக்கும் கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரப் படையினருக்கும் இடையிலான இந்த முதலாவது உரையாடலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நீங்கள் அனைவரும் கவனித்தபடி, 2024, செப்டம்பர் 23 அன்று, வெளிப்படையான மற்றும் அமைதியான தேர்தல் செயல்முறையைப் பின்பற்றி, இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அதிமேதகு. அனுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். செப்டம்பர் 24 அன்று, தொடர்புடைய அரசியலமைப்பு நடைமுறைகளின்படி, மேதகு ஜனாதிபதி அப்போதைய பாராளுமன்றத்தை கலைத்ததுடன், பாராளுமன்ற தேர்தலானது, 2024, நவம்பர் 14 அன்று நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, நாம் இன்னும் ஒரு இடைக்கால தேர்தல் காலத்தை கடந்து கொண்டிருக்கிறோம் என்பதை நான் முன்னிலைப்படுத்த விரும்புகின்றேன்.

பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை, 15 அமைச்சுக்களை அதிமேதகு ஜனாதிபதி கவனித்துவருகின்றமை உட்பட்ட மூன்று அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையொன்றே தற்போது காணப்படுகின்றது. நான், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக கடமையாற்றும் அதேவேளை மேலும், ஐந்து அமைச்சுக்களை கவனித்து வருகிறேன்! உங்களில் பெரும்பாலானவர்களை என்னால் தனித்தனியாகச் சந்திக்க முடியாமல் போனதற்கு காரணமும் இதுவே - இத்தாமதத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், மேலும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நெருங்கிய தொடர்புகளைத் தொடர்வதற்கு, இன்று உங்களைப் பற்றி அறிந்து கொள்வேன் என்று நம்புகிறேன்.

அதிமேதகு ஜனாதிபதி, இராஜதந்திரப் படையணிகளுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கு முன்னுரிமை அளித்துள்ளதுடன், இச்சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உங்களில் பலர் ஏற்கனவே ஜனாதிபதியை சந்தித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

மேன்மைதகு தலைவர்களே,

புதிய அரசாங்கத்தின் ஆரம்பத் திட்டங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கவும், சில உத்தியோகபூர்வமற்ற நெருங்கிய தொடர்புகளை மேற்கொள்ளவும் இக்கூட்டம் எனக்கு வாய்ப்பளிக்கும் என்று நான் நம்புகிறேன். நவம்பரில் பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே, புதிய அரசாங்கம் முன்னோக்கிச் செயற்படுவதில் முழுமையாக கவனம் செலுத்த முடியும், மேலும் இருதரப்பு உறவுகள் தொடர்பான விடயங்கள் சார்ந்த முக்கிய கட்டத்தில் உங்கள் ஒவ்வொருவருடனும் விரிவான ஈடுபாடுகளை நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

மேன்மைதகு தலைவர்களே,

சமீபத்தில் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை மக்கள் ‘மாற்ற’த்துடனான - ஒரு புதிய நெறிமுறை அரசியல் கலாசாரத்தில் நமது குடிமக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு ஆணைக்கு வாக்களித்தனர்.

ஜனாதிபதி நாட்டிற்கான தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டது போல், இந்த மாற்றம் பல படிகளை உள்ளடக்கியதுடன், பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்துவதும், வளர்ச்சியைத் தூண்டுவதும் மிக முக்கியமான ஒன்றாவதுடன் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து மக்களின் கஷ்டங்களைப் போக்குகிறது.

நீங்கள் அனைவரும் அறிவீர்கள், இம்மாத தொடக்கத்தில், இலங்கைக்கு தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்தி வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதித்துவக்குழுவுடன் நாங்கள் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மற்றும் தொடர்புடைய சீர்திருத்தத் திட்டம் தொடர்பான அடுத்த கட்டத்தில் நாங்கள் குழுவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவோம்.

இம்மாத தொடக்கத்தில், அதிகாரபூர்வ கடன் குழு (OCC) மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை இறையாண்மையுடையவர்களுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் முறையே 'அணுகுமுறையின் ஒப்பீட்டுத்' தேவைகள் மற்றும் கடன் நிலைத்தன்மை இலக்குகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்துள்ளன. எளிமையான வார்த்தைகளில் கூறினால், கடன் மறுசீரமைப்பு செயல்முறை முடிவடையும் தருவாயில் உள்ளது; இது சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை நோக்கி அரசாங்கம் செல்ல உதவுகின்ற அதேவேளை, பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதன் மூலம் நிலையான, சகல நலன்களும் உள்ளடக்கிய பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சிக்கான அடித்தளத்தை வலுப்படுத்துகிறது.

மற்றொரு நேர்மறையான படிமுறையாக, உலக வங்கி 200 மில்லியன் டாலர் மதிப்பிலான RESET (மீள்திறன், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி) மேம்பாட்டுக் கொள்கை செயல்பாட்டு (DPO) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பொருளாதார நிர்வாகம், வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட சீர்திருத்தத் திட்டத்தை செயல்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நிகழ்ச்சித் திட்டம் திருப்திகரமாக நடந்துகொண்டிருப்பதுடன், இரண்டு பாகங்கள் கொண்ட தொடரின் இரண்டாவது நடவடிக்கை இதுவாகும்.

இந்த ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்கள் எதிர்கொள்ளும் பாரிய பொருளாதாரச் சுமையைத் தணிப்பதற்கான நடைமுறைத் திட்டங்களை அமுல்படுத்துவதை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. நமது தனியார் துறை மற்றும் வணிக சமூகத்தின் நம்பிக்கையுடன், வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் பொருளாதார வளர்ச்சி உண்மையிலேயே உள்ளடக்கியதாக இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

நெறிமுறை நிர்வாகம், ஊழலை ஒழித்தல், பொதுச் சேவையில் செயல்திறன் மற்றும் சட்டத்தின் ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய அரசியல் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் அதிமேதகு ஜனாதிபதி அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். பொருளாதார வெற்றியானது, இந்த துணை தூண்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான பூச்சிய மட்டத்திலான சகிப்புத்தன்மை  என்ற உறுதிமொழிகளுக்கு இணங்க, சில முக்கிய விடயங்களில் நாங்கள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஏற்கனவே ஊழல் மோசடிகள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

இனம், மதம், வர்க்கம் மற்றும் பிற வேறுபாடுகளின் அடிப்படையிலான பிளவுபட்ட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பன்முகத்தன்மையை மதிக்கும் தேசத்தை உருவாக்குவது இவ்வரசாங்கத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும். இந்நோக்கத்திற்காக தேவையான அரசியலமைப்பு, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வர நாங்கள் தயாராகவுள்ளோம்.

கடந்த கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உட்பட அனைத்து குடிமக்களினதும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும். அதிமேதகு ஜனாதிபதி, புலனாய்வு அதிகாரிகளுக்கு பணித்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே நிலுவையிலுள்ள தெளிவாக அடையாளம் காணப்பட்ட பல பொறுப்புக்கூறல் வழக்குகள் மீதான விசாரணையை இரட்டிப்பாக்குவதாக அவ்வதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த அனைத்து முனைகளிலும், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பெற்ற ஆதரவால் அரசாங்கம் ஊக்குவிக்கப்படுகிறது. உங்கள் அனைவருடனும் கூட்டாளிகளாக நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் ஆவலாயுள்ளதுடன், மேலும் எங்கள் குடிமக்கள் அனைவரின் நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நல்வாழ்வை முன்னேற்றுவதற்கான எங்கள் முயற்சிகளுக்கு உங்களின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

மேதகு தலைவர்களே,

நான் சமீப வாரங்களில் வெளிநாட்டு அலுவல்கள் முன்னணியில் பல விடையங்களில் தீவிரமாகக் கவனம் செலுத்தினேன்:

-     பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை முடிவு செய்துள்ளது. எதிர்வரும் தேர்தல்கள் காரணமாக 2024 அக்டோபர் 23 முதல் 24 வரை ரஷ்ய கூட்டமைப்பின் கசானில் நடைபெறவுள்ள மேலதிக எல்லைகள் தாண்டிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மேதகு ஜனாதிபதியும், நானும் கலந்துகொள்ள இயலாத நிலையிலுள்ளோம். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இவ்வுச்சிமாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, உறுப்புரிமைக்கான கோரிக்கையை முன்வைப்பார். பிரிக்ஸ் இன் உறுப்பு நாடுகளில் உள்ள எனது சகாக்களிடம் ஆதரவைக் கோரி ஏற்கனவே கடிதம் மூலமான வேண்டுகோள் விடுத்துள்ளேன்

-     ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கட்டமைப்பிற்குள் பலப்படுத்தப்பட்ட மற்றும் உள்ளடக்கிய பலதரப்புவாதத்தின் மூலம், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு, அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான அபிலாஷைகளை நனவாக்குவதற்கு பிரிக்ஸ் ஆனது பயனுறுதிமிக்கதொரு கூட்டாண்மையென நாங்கள் கருதுகிறோம்.

-  இம்மாத முற்பகுதியில், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி இலங்கைக்கு முதல் உயர்மட்ட உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரை வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவ்விஜயத்தின் போது மேதகு ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் என்னுடன், சுமுகமான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக, அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி திஸாநாயக்கவுக்கு, பரஸ்பர வசதியான திகதியொன்றில் இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

-  2024, அக்டோபர் 09 அன்று, ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. சபைக்கு நாங்கள் வழங்கிய அறிக்கையில், மக்களின் நம்பிக்கையை அனுபவிக்கும் நல்லிணக்கத்திற்கான நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டுப் பொறிமுறைகள் மற்றும் செயல்முறைகளைக் கொண்டிருப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம். இந்த விடயத்தில் முன்னோக்கி நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.

-    சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நாங்கள் நிராகரித்த போதிலும், சபை மற்றும் அதன் வழக்கமான ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து ஈடுபடுவோம். மனித உரிமைகள் விவகாரங்களில் வெளிவாரியான பொறிமுறையை நிறுவும் பரிந்துரையை இலங்கை எதிர்க்கிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

-  ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக உதவிகரமான மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு, ஊடாடும் அமர்வில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு ஆதரவாக பல நாடுகளும் பேசியமை குறிப்பிடத்தக்கது.

-     இலங்கையானது, இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) தலைமைப்பொறுப்பில் இருக்கும் பின்னணியில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் காரணமாக, இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் அமைச்சர் மன்றக் கூட்டத்தை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் செயலகத்துடன் கலந்தாலோசித்து கால எல்லையானது முடிவு செய்யப்படும்.

-     சர்வதேச முன்னணியில், தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நாங்கள் தொடர்ந்து அதிக அக்கறையுடன் இருக்கிறோம். காசாவில் மனிதாபிமான நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது, மேலும் பரந்த பிராந்திய பரிமாணங்களில் குறிப்பாக லெபனானில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமீபத்திய முன்னேற்றங்கள் மிகவும் கவலைக்குரியவை. 1967 எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளை தொடர்புடைய ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, காசாவிற்கான உடனடி போர்நிறுத்தம் மற்றும் தடைகளற்ற மனிதாபிமான அணுகல் மற்றும் நிலையான இறையாண்மை மற்றும் சாத்தியமான பாலஸ்தீன அரசை ஸ்தாபிப்பதை உள்ளடக்கிய நிலையான இரு-அரசு தீர்வுக்கான எங்கள் அழைப்பைத் தொடர்கிறோம்.

-  லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையிலுள்ள (UNIFIL) எமது அமைதி காக்கும் படையினர் இருவர் காயம் அடைந்தமைக்கான தாக்குதல்களுக்கு நாம் வருந்துகின்றோம். பல சவாலான ஐக்கிய நாடுகளின் தூதரகங்களில் பணியாற்றும் எங்கள் அமைதி காக்கும் படையினர் குறித்து நாம் பெருமிதம் கொள்வதுடன், ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் வளாகங்களை மதிக்க வேண்டியது அனைத்து தரப்பினரினதும் கடமையாகும்.

இந்த இற்றைப்படுத்தல்களுடன், எனது கருத்துக்களை நிறைவு செய்ய விரும்புகிறேன்

உங்கள் அனைவரினதும் வருகைக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன், இந்நாள் இனியதாக அமைய வாழ்த்துகிறேன்.

********

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close