நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 80வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவிற்கு மேற்கொண்டிருந்த பயணம் நிறைவு

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 80வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவிற்கு மேற்கொண்டிருந்த பயணம் நிறைவு

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அமெரிக்காவிற்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தை இன்று நிறைவு செய்தார். ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களும் கலந்து கொண்டார்.

2025 செப்டம்பர் 24 அன்று பொதுச் சபையில் உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, வறுமையை ஒழிப்பதில் இலங்கையின் முன்னுரிமைகளை அடிக்கோடிட்டுக் காட்டினார்; தனிநபர்கள் மற்றும் நாடுகளின் எதிர்காலத்தை வடிவமைக்குமொரு தீர்க்கமான காரணியாக கல்வியை எடுத்துரைத்ததுடன், உடனடியானதும், கூட்டானதுமான சர்வதேச நடவடிக்கை தேவைப்படுமொரு சிக்கலான உலகளாவிய பிரச்சினையாக போதைப்பொருள் நெருக்கடியினைக் குறிப்பிட்டார். ஊழல் என்பது அபிவிருத்தி மற்றும் உலகளாவிய நல்வாழ்வுக்கு தடையொன்றாகவும், வறுமைக்கானதொரு காரணமாகவும் உள்ளது என்பதை அவர் வலியுறுத்தியதுடன், "ஊழலை எதிர்த்துப் போராடுவது ஆபத்தானது; எனினும் அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பின், அது இன்னும் கடுமையான ஆபத்துகளை வழங்கும்" என்றார்.

இஸ்ரேலியர்கள் மற்றும் பலஸ்தீனியர்கள் இருவரினதும் சட்டம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான கவக்கூறுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அதேவேளை, பலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத தமது நாட்டுக்கான உரிமையை இலங்கை அங்கீகரிப்பதை ஜனாதிபதி மேலும் உறுதிப்படுத்தினார். வன்முறையைக் கைவிட்டு, மனித விழுமியங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், சர்வதேச சமூகம் அமைதியின் தூதுவர்களாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்காக சர்வதேச சமூகத்திற்கு  அழைப்பு விடுத்த  ஜனாதிபதி, இலங்கையில் நடுநிலையானதொரு இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு மண்டலமொன்றை அமைக்க முன்மொழிந்தார்.

2025, செப்டெம்பர் 23 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் நடத்திய மாலை வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திசாநாயக்க கலந்து கொண்டார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோரையும் ஜனாதிபதி வரவேற்றதோடு வர்த்தகம், வணிகம், சுற்றுலா மற்றும் முதலீடு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி ஆலோசனை நடத்தினார்.

60 வது ஒப்புதலைத் தொடர்ந்து, BBNJ ஒப்பந்தம் (தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு குறித்த கடல் சட்டத்தின் மீதான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் கீழ் ஒப்பந்தம்) நடைமுறைக்கு வந்ததைக் கொண்டாடும் 60 க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன், பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் கோஸ்டாரிகாவின் ஜனாதிபதி ரோட்ரிகோ சேவ்ஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

இந்த பல்தரப்பு ஈடுபாடுகளுக்கு மேலதிகமாக, ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் போர்த்துக்கல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசா ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவுடனும் அவர் இருதரப்பு சந்திப்பொன்றை நடத்தினார். இச்சந்திப்புகளில் ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்துகொண்டார்.

இச்சந்திப்புக்களின் போது, ​​ஜனநாயகத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துதல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மீட்சி உள்ளிட்ட இலங்கையின் முன்னேற்றத்தை ஜனாதிபதி எடுத்துரைத்தார். வெளிநாட்டு முதலீட்டை மேம்படுத்துதல், சர்வதேச சமூகத்துடன் கூட்டாண்மைகளை ஆழப்படுத்துதல் மற்றும் பரஸ்பர அபிவிருத்தி மற்றும் நிலைபேறான வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாட்டின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

தனது பயணத்தின் போது, ​​ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் (UNSG) அன்டோனியோ குட்டெரஸுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்; அங்கு பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினரொருவராக இலங்கைக்கு மேற்கொண்ட தனது விஜயத்தை அன்புடன் நினைவு கூர்ந்தார். ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர், வளர்ந்து வரும் நாடுகளுடனான தனது ஒற்றுமையையும் வெளிப்படுத்தியதுடன், அவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கான தனது தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்தினார். மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தொடர்ச்சியான ஈடுபாடுகள் குறித்து ஆலோசிக்க ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கையும் சந்தித்தார்.

இப்பயணத்தின் போது, ​​வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹேரத், உலகளாவிய அபிவிருத்திக்கான முன்முயற்சியின் (GDI) உயர்மட்டக் கூட்டம், G77 மற்றும் சீனாவினது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களின் 49வது வருடாந்தக் கூட்டம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களின் CICA மன்றம் உள்ளிட்ட பல மன்றங்களில் உரையாற்றினார்.

அமைச்சரின் நிகழ்ச்சி நிரலில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி கே. ஜெய்சங்கர், மாலைத்தீவு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், நோர்வே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்பன் பார்த் எய்ட், பின்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எலினா மரியா வால்டோனென், வெனிசுலா வெளிநட்டு அலுவல்கள் அமைச்சர் யுவான் எட்வார்டோ கில் பிண்டோ மற்றும் பெலாரஸ் வெளிநட்டு அலுவல்கள் அமைச்சர் மாக்சிம் ரைசென்கோவ் ஆகியோருடன் உயர்மட்ட இருதரப்பு ஈடுபாடுகளும் இடம்பெற்றன.

பரஸ்பர ஆர்வம் மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இந்தோனேசியாவின் வெளிநாட்டு அலுவல்களுக்கான துணை அமைச்சர் அர்மநாதா கிறிஸ்டியாவான் நசீர் மற்றும் ஜெர்மனியின் வெளிநாட்டு அலுவலர்களுக்கான துணை அமைச்சர் செராப் குலர் ஆகியோருடன் அவர் மேலும் கலந்துரையாடல்களை நிகழ்த்தினார். அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச்செயலாளர் அலிசன் ஹூக்கருடனும் அமைச்சர் கலந்துரையாடினார்.

மேலும், உலக வர்த்தக அமைப்பில் இலங்கையின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் பல்தரப்பு நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து உலக வர்த்தக அமைப்பின் (WTO) பணிப்பாளர் நாயகம் கோசி ஒகோன்ஜோ-இவெலாவை அமைச்சர் ஹேரத் சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் லி ஜுன்ஹுவா மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைச் செயலாளர் ஜீன்-பியரீ லாக்ரோயிக்ஸ் ஆகியோருடனும் அமைச்சர் சந்திப்புகளை நடத்தினார்.

இப்பயணம் உலக அரங்கில் இலங்கையின் செயலில் மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், அமைதி, மேம்பாடு மற்றும் பகிரப்பட்ட செழுமைக்கான நாட்டின் கூட்டாண்மைகளை வலுப்படுத்தியது.

ஜனாதிபதி திஸாநாயக்கவும், அமைச்சர் ஹேரத்தும் இலங்கை புலம்பெயர்ந்தோர் சமூகத்தின் உறுப்பினர்களுடன் நியூயார்க்கிற்கு தங்கள் பயனுறுதிமிக்க பயணத்தை நிறைவு செய்தனர். மூன்று மாநிலப் பகுதிகளிலிருந்தும், அமெரிக்காவின் ஏனைய பகுதிகளிலிருந்தும் இலங்கையர்கள் ஒன்றுகூடியிருந்தமை, இலங்கை நாட்டின் தலைவரொன்றின் வருகையைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்த, இலங்கையர்களின் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாக இருந்தது. இது இலங்கைக்கும் அதன் வெளிநாட்டு சமூகத்திற்கும் இடையிலான நீடித்த பிணைப்பை வெளிப்படுத்தியது.

வெளிநட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 செப்டம்பர் 26

Please follow and like us:

Close