ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஜெர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஜெர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் 2025, ஜூன் 11 முதல் 13 வரையிலான,  ஜெர்மனிக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயமானது, இருதரப்பு அரசியல் சந்திப்புகள், வணிக வட்டமேசை உரையாடல் மற்றும் ஜெர்மன் சுற்றுலாத் துறையுடனான ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ஜனாதிபதி பிராங்க்-வோல்டர் ஸ்டெய்ன்மியர் விடுத்த அழைப்பின் பேரில், விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி திஸாநாயக்க, 2025, ஜூன் 11 அன்று பெர்லினில் உள்ள பெலிவியூ அரண்மனையில் ஜெர்மனிய ஆயுதப் படைகளால் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வ மரியாதையுடன் ஜெர்மனிய ஜனாதிபதியால்  வரவேற்கப்பட்டார்.

இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது, ​​சுமுகமாகப் பேணப்பட்டு வரும்  இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துதல், தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலாத் துறை போன்ற துறைகளில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை வினைத்திறனாகப் பயன்படுத்துதல் குறித்து கவனம் செலுத்தினர். இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரப்படுத்தல், நல்லிணக்க முயற்சிகள் மற்றும் எதிர்காலத்திற்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி திஸாநாயக்க ஜெர்மன் ஜனாதிபதியிடம் விளக்கினார்.

இவ்விஜயத்தின் போது, ​​ஜெர்மன் வெளியுறவு அமைச்சரும், பேராசிரியருமான ஜோஹான் வதேபுல் மற்றும் ஜெர்மன் கூட்டாட்சி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைச்சர் திருமதி ரீம் அலபாலி-ரடோவன் ஆகியோர் ஜனாதிபதி திஸாநாயக்கவை சந்தித்தனர். ஜெர்மனிய வெளியுறவு அமைச்சர், பேராசியர் வதேபுலுடனான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இருதரப்புப் பரிமாற்றங்களை அதிகரித்தல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகள், ஜெர்மனிய முதலீட்டை மேம்படுத்துதல், ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தகச் சலுகை மற்றும் பல்தரப்பு அரங்கில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தின.

அமைச்சர் அலபாலி-ரடோவனுடனான சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி திஸாநாயக்க, 65 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்குப் பயனளித்துவரும், சமீபத்திய உதாரணங்களாகிய காலியில் அமைந்துள்ள ஜெர்மன்-இலங்கை தோழமை மகப்பேற்று மருத்துவமனை மற்றும் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் போன்ற ஜெர்மனிய அரசின் அபிவிருத்திசார் உதவிகளைப் பாராட்டினார். குறிப்பாக தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தல் போன்ற எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டன.

இவ்விஜயத்தின் போது, ​​ஜெர்மனிய கூட்டாட்சிப் பொருளாதார விவகாரங்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரும், பேராசிரியருமான தோமஸ் ஸ்டெஃபன், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்து இலங்கையின் சமீபத்திய பொருளாதார முன்னேற்றம், மேம்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார்.

இவ்விஜயம், பிரதானமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியதுடன், வளர்ந்து வரும் துறைகளிலுள்ள கணிசமான வாய்ப்புகளையும் உள்ளடக்கியதாக அமைந்தது. பெர்லினில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜெர்மனிய வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை (DIHK) மற்றும் ஜெர்மன் ஆசிய-பசிபிக் வணிக சங்கம் (OAV) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஜெர்மனிய வர்த்தக மற்றும் தொழிற்துறை சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற வணிக சம்மேளனத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, இலங்கை செயற்பாட்டு ரீதியானதும், வெளிப்படையானதுமான முதலீட்டுச் சூழலை உருவாக்குமென மீண்டும் வலியுறுத்தினார்; மேலும் இலங்கையின் அபிவிருத்தித்திறன் மற்றும் அதன் மூலோபாய அமைவிடத்தின் காரணத்தினால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜேர்மனிய வணிக சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.

வெளிநோக்கிய சுற்றுலாவை மையமாகக் கொண்ட ஜெர்மனியில் உள்ள முக்கிய சுற்றுலாத் துறை சங்கங்களுடனான சந்திப்பின் பொது, இலங்கையின் சுற்றுலாத் துறையின் நிலைபேறான  தன்மையைப் பாதுகாப்பதற்கும், முக்கிய தொழிற்துறையொன்றான இத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, மனிதவள அபிவிருத்தி போன்ற சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் அரசின் திட்டங்களை ஜனாதிபதி திஸாநாயக்க விளக்கினார். சுற்றுலாத் துறையில் முதலீடு தொடர்பான அம்சங்களையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

ஜனாதிபதியுடன் இக்கூட்டங்களில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்; ஜெர்மனிக்கான இலங்கைத் தூதர் வருணி முத்துக்குமாரான; வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன; முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத்; மற்றும் ஏனைய சிரேஷ்ட அரச அதிகாரிகள்  இணைந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 ஜூன் 14

Please follow and like us:

Close