‘டிஸ்ரப்ட் ஏசியா-2025’: ஒன்றுகூடலுக்கான மன்றத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் இணைதல்

‘டிஸ்ரப்ட் ஏசியா-2025’: ஒன்றுகூடலுக்கான மன்றத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் இணைதல்

2025 செப்டம்பரில் கொழும்பில் நடைபெறவிருக்கும் ‘டிஸ்ரப்ட் ஏசியா-2025’ என்ற முக்கிய நிகழ்வின் மூலம் தகவல் தொழில்நுட்பக் கூட்டாண்மைகள், புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டைக் கொண்டுவரும் நோக்கத்துடன் இலத்திரனியல் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கள், இலங்கைத் தூதரகங்கள் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் (ICTA) ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயற்படவுள்ளன.

2025 மே 21 அன்று, இலத்திரனியல் பொருளாதாரத்திற்கான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோரின் இணை-தலைமையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற ஒன்றுகூடல்  அமர்வுகளில், இலங்கையின் தகவல் தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், மூலங்கள் மற்றும் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப கூட்டாண்மைகள் மற்றும் முதலீடுகளை நிறுவுவதற்கு ‘டிஸ்ரப்ட் ஏசியா-2025’  கொண்டுவரவுள்ள குறிப்பிடத்தக்க வாய்ப்புக்கள் குறித்து தூதரகத் தலைவர்கள் கலந்துரையாடினர்.

இலங்கையை துடிப்பானதொரு இலத்திரனியல் பொருளாதாரமாகவும், உயர் இயக்கநிலையுள்ள தொடக்க மையமாகவும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ‘டிஸ்ரப்ட் ஏசியா-2025’ உச்சி மாநாடு, ஒரு சான்றாகின்றதென பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர குறிப்பிட்டார். இவ்வுச்சிமாநாட்டைப் பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான ஊக்கியொன்றாக மாற்றுவதில் இராஜதந்திர வலையமைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளின் பலத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் இலத்திரனியல் பொருளாதாரம் குறித்த உலகக் கண்ணோட்டத்தை பெரும்பாலும் மிகவும் திறமையான புறமூலாக்க இலக்கிலிருந்து ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பால் எளிதாக்கப்பட்டதொரு செழுமையான தொடக்க மையமாக மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவுத்தரவு மையங்கள் மற்றும் இலத்திரனியல் பொது உட்கட்டமைப்பு தொடர்பாக நாட்டின் ஆற்றலை எடுத்துரைத்த அவர், தகவல் தொழில்நுட்ப நிகழ்வுகளுக்கான பிராந்திய மையமாக இலங்கையை மூலோபாய ரீதியாக நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இலத்திரனியல் பொருளாதார அமைச்சின் செயலாளர் (பதில்), தகவல், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத் தலைவர் மற்றும் இலத்திரனியல் பொருளாதாரத்திற்கான தலைமை ஜனாதிபதி ஆலோசகர், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் (பொருளாதார விவகாரங்கள்) மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் இலத்திரனியல் பொருளாதாரத்திற்கான உதவித் தலைமை அதிகாரி ஆகியோர், "டிஸ்ரப்ட் ஏசியா 2025" நிகழ்வின் நோக்கங்கள், துறையின் மூலோபாய முன்னோக்குகள், 2030 வரையிலானதும் மற்றும் அதன் பின்னரானதுமான தொழிற்துறை வழிகாட்டுதலை கோடிட்டுக் காட்டினர். "டிஸ்ரப்ட் ஏசியா-2025" உச்சி மாநாடானது, இவ்வாண்டு கொழும்பில் நடைபெறும் இலங்கையின் முக்கிய தொழிற்துறைசார் நிகழ்வாக அமையும்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 மே 24

 

 

Please follow and like us:

Close