ஜெர்மனியின் பெர்லினில், 2025 மே 13 முதல் 14 வரையில், நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் அமைச்சர்கள் கூட்டத்திற்கு இலங்கைத் தூதுக்குழுவை வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மாண்புமிகு அருண் ஹேமச்சந்திர வழிநடத்தியதுடன், அவர், கொள்கை ரீதியான, பொறுப்புணர்வுடன் கூடிய ஈடுபாட்டின் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தின் உயர்மட்ட அங்கத்தின் போது, இலங்கையின் அறிக்கையை வெளியிட்ட பிரதி அமைச்சர், கூட்டத்தை நடத்தியதற்காக ஜெர்மனி கூட்டாட்சிக் குடியரசிற்கு நன்றி தெரிவித்தார்; மேலும் உலகளாவிய அமைதி காக்கும் பணியில் ஜெர்மனியின் பங்களிப்பையம் பாராட்டினார். சீரற்ற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வந்த போதிலும், அதிகரித்து வரும் உடனடிச் செயற்பாட்டு அடிப்படையிலான நிலப்பரப்புகள் காணப்பட்ட போதிலும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணிச்சல் மிக்க முயற்சிகளுக்கும் பிரதி அமைச்சர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
தொழில்வாண்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த துறைகளுக்குள் மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட விரிவான சீர்திருத்தங்களை நோக்கிய புதிய அரசாங்கத்தின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு, பயனுறுதிமிக்கதொரு பங்களிப்பை வழங்குவதற்கான புதிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்திய பிரதி அமைச்சர், அவரது உரையில் மேலும் அமைதி காக்கும் பணிக்கு ஆதரவாக இலங்கை அதிக பொறுப்புகளை ஏற்கத் தயாராக உள்ளது என்றும் கூறினார். பயனுறுதிமிக்க, பதிலளிக்கக்கூடிய மற்றும் மீள்தன்மை கொண்ட அமைதி காக்கும் பணியின் பகிரப்பட்ட நோக்கங்களை முன்னேற்றுவதில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையை ஒரு நம்பகமான மற்றும் திறமையான பங்காளியாக தொடர்ந்து கருத முடியும் என்று அவர் உறுதி கூறினார்.
அமைச்சர்கள் கூட்டத்திற்கான பிரநிதிகள் குழுவில், இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஏ. எச். எல். ஜி. அமரபால, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர தூதர்ப் பணியகத்தின் இராணுவ ஆலோசகர் பிரிகேடியர் சுமல் விக்ரமசேகர மற்றும் சிறப்பு பணிக்குழுவின் காவற்துறைக் கண்காணிப்பாளர் திரு. ஆர். எம். விமலரத்ன ஆகியோர் அடங்குவர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 மே 15