புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தூதரகத் தலைவர்களுக்கான அறிமுக வழிகாட்டல் நிகழ்ச்சி

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தூதரகத் தலைவர்களுக்கான அறிமுக வழிகாட்டல் நிகழ்ச்சி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட பதினான்கு (14)  இலங்கைத் தூதரகங்கள் மற்றும் இரண்டு (02) பணிமனைகளுக்கான தலைவர்களுக்கான அறிமுக வழிகாட்டல் நிகழ்ச்சியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு டிசம்பர் 16 முதல் 23ஆந் திகதி வரை நடாத்தியது. நியமனம் செய்யப்பட்டவர்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான தொழில் இராஜதந்திரிகள் தூதரகத் தலைவர்களாக  நியமிக்கப்பட்டதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வரவேற்கின்றது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பன்னிரெண்டு (12) தூதரகத் தலைவர்கள் மற்றும் ஒரு (01) பணிமனைத் தலைவர் இலங்கை வெளிநாட்டு சேவையில் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கைத் தூதரகங்களுக்கான தற்போதைய முன்னுரிமைகள் மற்றும் வெளியுறவுக்  கொள்கை சார்ந்த சவால்களை முன்னிலைப்படுத்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அவர்களினால் அறிமுக வழிகாட்டல் நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன, நாட்டின் இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடைவதில் தூதரகத் தலைவர்களின் தலைமைப் பாத்திரம் குறித்து வலியுறுத்தினார். அறிமுக வழிகாட்டல் நிகழ்ச்சியானது பொருளாதார, அரசியல், பாதுகாப்பு, கலாச்சார, கொன்சியூலர் விவகாரங்கள் மற்றும் வட மாகாணம் மற்றும் ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்கான கள விஜயங்கள் குறித்த கலந்துரையாடல்களை உள்ளடக்கியிருந்தது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளியுறசுந் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்ட குழுக் கலந்துரையாடலின் போது, நியமிக்கப்பட்ட தூதுவர்கள் தமது பதவிக்காலத்திற்கான உத்திகளை முன்வைத்தனர். நியமிக்கப்பட்டுள்ள தூதரகத் தலைவர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேரில் சந்தித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உரிய நேரத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

வெளிநாட்டு சேவையிலிருந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதரகத் தலைவர்களில்,  ஜெனிவாவிலுள்ள ஐ.நா. விற்கான நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக, பஹ்ரைனுக்கான நியமிக்கப்பட்ட தூதுவர் ரீத்தி விஜேரத்ன, அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர, வியட்நாமுக்கான நியமிக்கப்பட்ட தூதுவர் கலாநிதி சாஜ் மெண்டிஸ், பிரான்சுக்கான நியமிக்கப்பட்ட தூதுவர் மனிஷா குணசேகர, குவைத்துக்கான நியமிக்கப்பட்ட தூதுவர் பி. காண்டீபன், எத்தியோப்பியா மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்திற்கான நியமிக்கப்பட்ட தூதுவர் தெஷாந்த குமாரசிறி, ஜேர்மனிக்கான நியமிக்கப்பட்ட தூதுவர் வருணி முத்துக்குமாரண, லெபனானுக்கான நியமிக்கப்பட்ட தூதுவர் கபில ஜயவீர, ஜோர்தானுக்கான நியமிக்கப்பட்ட தூதுவர் பிரியங்கிகா விஜேகுணசேகர, பிலிப்பைன்ஸிற்கான நியமிக்கப்பட்ட தூதுவர் கலாநிதி சானக தல்பஹேவா, இஸ்ரேலுக்கான நியமிக்கப்பட்ட தூதுவர் நிமல் பண்டார மற்றும் மிலானுக்கான நியமிக்கப்பட்ட துணைத் தூதுவர் திலானி வீரகோன் ஆகியோர் உள்ளடங்குவர்.

மேலும், இந்தோனேசியாவுக்கான நியமிக்கப்பட்ட தூதுவராக அட்மிரல் ஜயநாத் கொலம்பகே  அவர்களும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான நியமிக்கப்பட்ட தூதுவராக உதய இந்திரரத்ன அவர்களும், மெல்பேர்னிற்கான துணைத் தூதுவராக சந்தித் சமரசிங்க அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

 

2022 டிசம்பர் 27

 

 

Please follow and like us:

Close