வெளிநாட்டமைச்சின் புதிய செயலாளர் அட்மிரல், பேராசிரியர் ஜனநாத் கொலம்பகே கடமைகளை ஆரம்பித்தார்

வெளிநாட்டமைச்சின் புதிய செயலாளர் அட்மிரல், பேராசிரியர் ஜனநாத் கொலம்பகே கடமைகளை ஆரம்பித்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளிநாட்டமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அட்மிரல் பேராசிரியர். கலாநிதி ஜயநாத் கொலம்பகே இன்று (14 ஆகஸ்ட்) தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

புதிய வெளிநாட்டமைச்சின் செயலாளர்  அட்மிரல், பேராசிரியர் ஜனநாத் கொலம்பகே இன்று காலையில் வெளிநாட்டமைச்சிற்கு வருகை தந்தபோது, சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

அட்மிரல் கொலம்பகே, முன்னதாக, டிசம்பர் 2019 இலிருந்து மேதகு ஜனாதிபதியின் வெளிநாட்டு உறவுகளுக்கான மேலதிக செயலாளராகவிருந்தார். அத்துடன் அவர், தற்போது இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் சேவையாற்றுகின்றார். அட்மிரல் கொலம்பகே இலங்கை கடற்படையில் 36 வருடங்களாக சேவையாற்றி, 01 ஜூலை 2014 இல் கடற்படை தளபதியாக இளைப்பாறினார்.  இவர், இலங்கை கடற்படையின் 18 ஆவது தளபதியாக கடமையாற்றியதுடன், தனது தீரச்செயலுக்காகவும் விதிவிலக்கான சேவைக்காகவும் பாராட்டப்பட்டார்.

கடற்படையிலிருந்து இளைப்பாறிய பின்னர், அட்மிரல் கொலம்பகே, இந்திய – இலங்கை முயற்சிகள் மற்றும், கொழும்பைத் தளமாககொண்ட முன்னணி சிந்திப்போர் குழுமம் மற்றும் ஆராய்ச்சி நிலையமான ‘பாத்ஃபைண்டர்’ நிறுவனத்தில் கடல்சார் சட்டங்கள் பணிப்பாளராகவும் சேவையாற்றினார். இவர் பல இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் இலங்கையையும் ‘பாத்ஃபைண்டர்’ நிறுவனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வதேச அரசியல், மூலோபாய மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் குழு விவாதங்கள் மற்றும் தலைமை அமர்வுகளில் பங்கேற்றிருக்கின்றார்.

அட்மிரல் கொலம்பகே இலங்கை, வங்காளதேசம், சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவகங்களில் வருகை விரிவுரையாளராக கடமையாற்றினார். மேலும் அவர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கல்விசார் இதழ்களில் ஆசிரியராகவும் மதிப்பாய்வாளராகவும் இருந்துள்ளார்.

வெளிநாட்டுச் செயலாளர் அட்மிர கொலம்பகே ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதி பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் விஞ்ஞான முதுமாணி பட்டமும், லண்டன் கிங்க்ஸ் கல்லூரியில் சர்வதேச கற்கைகள் நெறியில் கலை முதுமாணி பட்டமும் பெற்றிருக்கிறார்.  கலாநிதி பட்டத்திற்கான, “இலங்கை விடயத்தில் கடலில் சமச்சீரற்ற போர்” என்ற அவரது ஆராய்ச்சியானது, ஜேர்மனி லம்பேர்ட் கல்விசார் வெளியீட்டினால் பிரசுரிக்கப்பட்டது. இவர் லண்டன் கப்பல்படை நிறுவகத்தின் உறுப்பினராகவுமுள்ளார்.

 

 

வெளிநாட்டமைச்சு

கொழும்பு

14 ஆகஸ்ட் 2020

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close