அணிசேரா இயக்கத்தின் அரச மற்றும் அரசாங்கத் தலைவர்களின் 18 வது உச்சி மாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குகின்ற வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன செவ்வாய்க்கிழமை அஸர்பைஜான், பாகு நகரை சென்றடைந்தார்.
அணிசேரா இயக்கத்திற்கான அஸர்பைஜானின் புதிய தலைமையின் கீழ் அக்டோபர் 25 முதல் 26 வரை நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்கு வழிவகுக்கும் ஆயத்த அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் அமைச்சர் மாரப்பன பங்கேற்கின்றார். ஆயத்த அமைச்சர்கள் மட்ட கூட்டமானது, அக்டோபர் 21 முதல் 22 வரை நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டத்தைத் தொடர்ந்து இடம்பெறுகின்றது.
அணிசேரா இயக்கத்தின் 18 வது உச்சி மாநாடு 'சமகால உலகொன்றின் சவால்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் போதுமான பதிலை உறுதி செய்வதற்கான பண்டுங் கோட்பாடுகளை நிலைநிறுத்துதல்' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகின்றது.
இலங்கை 1955 இன் பண்டுங் மாநாட்டின் இணை அனுசரணையாளராகவும், அணிசேரா இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும் உள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த இயக்கம் தொடர்ந்தும் முன்னேறி வருவதுடன், அதன் உறுப்பினர் தொகை தற்போது 120 ஐ தாண்டியுள்ளது.