தற்போதைய பொருளாதார சூழலில் சுற்றுலா ஊக்குவிப்பின் மறுமலர்ச்சி குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றுலா  மற்றும் காணி அமைச்சு ஆகியன கலந்துரையாடல்

தற்போதைய பொருளாதார சூழலில் சுற்றுலா ஊக்குவிப்பின் மறுமலர்ச்சி குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றுலா  மற்றும் காணி அமைச்சு ஆகியன கலந்துரையாடல்

தற்போதைய சவால்கள், இலங்கை சுற்றுலாவுக்கான மூலோபாயத்தை உருவாக்குதல் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதில் இலங்கைத் தூதரகங்கள்/பணிமனைகளின் பங்கு குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2022 டிசம்பர் 21ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில், இரு அமைச்சுக்களினதும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, குடிவரவு  மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை ஹோட்டல் சங்கம் மற்றும் இலங்கை உள்வரும் சுற்றுலா செயற்பாட்டாளர்களின் சங்கம் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்  தூதரகங்கள்/பணிமனைளின் தலைவர்கள் உட்பட முக்கிய பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் சிறந்த முயற்சிகளைத் தேடும் நோக்கில் இது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சியாகும். வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன  தலைமையில் பங்குதாரர்களுடனான ஆரம்ப உத்தியோகபூர்வக் கூட்டம் 2022 நவம்பர் 18ஆந் திகதி நடைபெற்றது.

ஆரம்ப உரையை வழங்கிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தற்போதைய பொருளாதார சூழலில் அந்நிய செலாவணியின் நேரடி ஆதாரமாக விளங்கும் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது இலங்கையின் முக்கிய பொருளாதார முன்னுரிமைகளில் ஒன்றாகும் என வலியுறுத்தியதுடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள்/பணிமனைகள் இலங்கையை சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த இடமாக நிலைநிறுத்துவதற்கும் எதிர்மறையான விளம்பரங்களை  எதிர்ப்பதற்குமான முக்கிய பங்கை வகிப்பதாக சுட்டிக் காட்டினார்.

இச்சந்திப்பின் போது, இலங்கைத் தூதரகங்கள்/பணிமனைகள் மற்றும் தொழில்துறைத் பங்குதாரர்கள் இணைந்து தொழில்துறையை புத்துயிர் பெறச் செய்யக்கூடிய நடவடிக்கைகள்  மற்றும் உத்திகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விரிவாகக் கலந்துரையாடினர்.

விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்தின் போது, தூதரகங்கள்/பணிமனைகளின் தலைவர்கள் ஏற்கனவே சுற்றுலா ஊக்குவிப்பில் முன்னெடுத்த நடவடிக்கைகள், அந்தந்த சந்தைகளில் உள்ள சாத்தியக்கூறுகள் மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பில் அந்தந்த  புரவலன்/அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் சிறந்த நடைமுறைகள் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 டிசம்பர் 23

 

 

Please follow and like us:

Close