இலங்கை சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் ஊட்டுவதற்கான திட்டங்களை சுற்றுலா  மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விளக்ளம்

இலங்கை சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் ஊட்டுவதற்கான திட்டங்களை சுற்றுலா  மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விளக்ளம்

மிலானோ பி.ஐ.டி. 2023 சர்வதேச சுற்றுலா பரிமாற்றத்தைத் தொடர்ந்து, மிலானில் உள்ள இலங்கையின் துணைத்  தூதரகம், சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன், சுற்றுலா நடத்துனர்கள், பயண ஊடகங்கள் மற்றும் சுற்றுலாத் துறையின் ஏனைய பங்குதாரர்களுக்காக 2023 பெப்ரவரி 14ஆந் திகதி துணைத் தூதரக வளாகத்தில்  ஒரு வலையமைப்பு அமர்வை ஏற்பாடு செய்தது.

சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்களை வரவேற்றுப் பேசிய துணைத் தூதுவர் திலானி வீரகோன், இலங்கை ஒரு சுற்றுலாத் தலமாக, அனைத்து தரப்புப் பயணிகளினதும்  பல்வேறு தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்து அவர்களின் கனவு விடுமுறையை நனவாக்கும் என வலியுறுத்தினார். இலங்கையும் இத்தாலியும் அழகான இயற்கையிலிருந்து வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் தொல்பொருள் பொக்கிஷங்கள் வரை பலவற்றைப் பகிர்ந்து கொள்வதால், இத்தாலியர்களின் இரண்டாவது தாயகமாக இலங்கை இருக்க முடியும் என துணைத் தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆறு மாதங்களில் நம்பிக்கையுடன் அபிவிருத்தி யடைந்துள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகை வழமைக்குத் திரும்பியுள்ளதாக அமைச்சர் ஹரின்  பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நியோஸ் மற்றும் ஐ.டி.ஏ. எயார்லைன்ஸ் நிறுவனங்களுடனான சந்திப்புக்கள் நேர்மறையானவை என்றும், மிலான் மற்றும் ரோமில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை விரைவில் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பெர்னாண்டோ குறிப்பிட்டார். இத்தாலியில் உள்ள இலங்கை சுற்றுலா சந்தையை மறுசீரமைப்பதற்காக மிலான் மற்றும் ரோமில் இரண்டு பெரிய அளவிலான சுற்றுலா வீதி நிகழ்வுகளை நடாத்த விரும்புவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2024ஆம் ஆண்டு இலங்கைக்கான உயர்தர சுற்றுலாத்துறையில் விதிவிலக்கான அபிவிருத்தியை ஏற்படுத்தும் ஆண்டாக எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.  சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு அனுபவங்களுடன் நாடு மீள்வரையறை செய்யப்படும். இலங்கை வெறும் 'அனுபவம் நிறைந்த' நாடாக இருக்கக் கூடாது என அவர் மீண்டும் வலியுறுத்தினார். இலங்கையின் கரையோரத்தில் 140 க்கும் மேற்பட்ட கப்பல் விபத்துக்கள் உள்ளதால், ஸ்கூபா டைவிங்கிற்கான இடமாக இலங்கை அமையும். ஹன்டானாவில் இருந்து ஆரம்பித்து ஹப்புத்தளை, எல்ல வழியாக நுவரெலியாவில் முடிவடையும் வரையிலான 'பெக்கோ டிரெயில்' என்ற கருப்பொருளில் ஒரு தொலைதூரப் பயணம் அறிமுகப்படுத்தப்படும். பெக்கோ டிரெயில் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு நடைப்பயிற்சி அனுபவமாகும்.

சுற்றுலாப் பயணிகளின் தேவைகளுக்கு முடிவான தீர்வாக, பார்வையிட வேண்டிய இடங்கள்,  மீளாய்வுகளுடன் கூடிய தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். இந்த செயலி மூலம் மாரவில, வென்னப்புவ கரையோரப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வில்லாக்களை வாடகைக்கு எடுக்குமாறு இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் தலைவர் திசும் ஜயசூரிய,  இத்தாலியர்கள் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுக்கான இடமாக நாடு தெரிவு செய்யப்படுவதால், அவர்களின் எம்.ஐ.சி.இ. சுற்றுலாத் தேவைகளுக்காக இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

2022 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு  அறிமுக சுற்றுப்பயணத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த இத்தாலியில் இருந்து புகைப்பட ஊடகவியலாளர் மார்கோ பியூமி, இந்த வலையமைப்பு அமர்வின் போது, இலங்கையில் உண்மையான இலங்கை உணவு, இயற்கைக்கு இசைவாக இருக்கும் ஜெஃப்ரி பாவா கட்டிடக்கலை மற்றும் மத்திய மலைகள் முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பயணங்கள் குறித்த தனது அனுபவத்தை விளக்கினார். சந்தேகத்திற்கு இடமின்றி, அனைவரும் பார்வையிட வேண்டிய பாதுகாப்பான மற்றும் குடும்பம் சார் நட்புறவான சுற்றுலாத் தலமாக இலங்கை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வலையமைப்பு அமர்வு பங்கேற்பாளர்களுக்கு இலங்கையின் சுவையான உணவு  வகைகளையும், நாட்டின் பழம்பெரும் விருந்தோம்பல் குறித்த பார்வையையும் வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தப்பட்டது.

இலங்கையின் துணைத் தூதரகம்

மிலான்

2023 பிப்ரவரி 24

Please follow and like us:

Close