அமைச்சர்

கௌரவ. விஜித ஹேரத்
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

 

விஜித ஹேரத், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக 2024, நவம்பர் 18 அன்று பதவியேற்றார்.

அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியொருவரான அமைச்சர் ஹேரத், 2000 ஆம் ஆண்டு முதல் கம்பஹா மாவட்டத்திற்கான இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். 2024 பொதுத் தேர்தலில், இலங்கை பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளைப் பெற்று, மீண்டும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமைச்சர் ஹேரத், கம்பஹா மாவட்டத்தின் தலைவராகவும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றுவதன் மூலம், தேசிய மக்கள் சக்தி (NPP) இயக்கத்தில் முக்கிய தலைமைப்பங்கை வகிக்கிறார்.

அவர், சமீபத்தில் அதாவது, 2024 இல் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2004 முதல் 2005 வரை கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரிய அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அமைச்சர் ஹேரத், அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த காலத்தில்,  அரச நிதி, அரச கணக்குகள், அரசியலமைப்பு விவகாரங்கள், விவசாயம் மற்றும் எரிசக்தி தொடர்பான பாராளுமன்றக் குழுக்களில் பணியாற்றுவதன் மூலம் பொது நலனை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். அரசியலமைப்பு மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள அமைச்சர் ஹேரத், இருபதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற நட்புறவு சங்கங்களில் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் இலங்கையை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் ஹேரத், இலங்கையின் முன்னணி அரச பல்கலைக்கழகங்களில் ஒன்றான களனி பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். 26 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், அமைச்சர் ஹேரத், உள்நாட்டிலும், உலக அரங்கிலும், ஜனநாயக நிர்வாகம், சமூக சமத்துவம், ஊழல் எதிர்ப்பு மற்றும் நிலைபேறான தேசிய வளர்ச்சிக்கான உறுதியான நடுநிலைவாதியாக விளங்குகிறார்.

 

Close