வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் நடைபெற்ற 26வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனத் தலைவர்களின் கூட்டத்தில் (HDUCIM) உரையாற்றுகிறார்

 வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் நடைபெற்ற 26வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனத் தலைவர்களின் கூட்டத்தில் (HDUCIM) உரையாற்றுகிறார்

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (KDU) நடத்திய 26வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் கூட்டம் (HDUCIM) 2025 ஜனவரி 22-25 வரை காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கை மற்றும் கம்போடியா இணைந்து நடத்திய இந்நிகழ்வு, பிராந்தியம் முழுவதும் உள்ள பாதுகாப்பு பல்கலைக்கழகங்களின் தலைவர்களை ஒன்றிணைத்தது. உறுப்பு நாடுகளிடையே பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகள் குறித்த உரையாடல், கல்வியியல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான தளமாக, ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனத் தலைவர்களின் கூட்டம் (ARF-HDUCIM) செயற்படுகிறது.

ஜனவரி 24 அன்று, நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஆசியான் உடனான உறவை வலுப்படுத்துவதற்கும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் இலங்கையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். இந்தியப் பெருங்கடலில் நாட்டின் மூலோபாய இருப்பிடத்தைக் குறிப்பிட்டு, நடுநிலைமை மற்றும் அணிசேரா கொள்கைக்கான இலங்கையின் உறுதிப்பாட்டையும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் கூட்டாண்மைகளைப் பின்தொடர்வதையும் அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

சைபர் போர், கலப்பின மோதல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த செயற்பாடுகள் போன்ற நவீன கால அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புக் கல்வி உருவாக்கபட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார். பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்கள் ஆராய்ச்சியை மேம்படுத்தவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், உறுப்பு நாடுகளிடையே வலுவான உறவுகளை வளர்க்கவும் கூட்டு வலையமைப்புக்களை நிறுவ வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

உலகளாவிய அமைதி காக்கும் பணிகளில் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய அமைச்சர் ஹேரத், 1958 முதல் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கு 25,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை பங்களித்ததன் பாரம்பரியத்தை மேற்கோள் காட்டினார். போதைப்பொருள் எதிர்ப்பு, கடத்தல் எதிர்ப்பு மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்களிப்பதன் மூலம் ஒருங்கிணைந்த கடல்சார் படையில் (CMF) பங்கேற்பது உட்பட பிராந்திய கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளில் நாட்டின் பங்கை அவர் எடுத்துரைத்தார்.

ஆசியான் பிராந்திய மன்றத்தின் முன்முயற்சிகள் மூலம் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து அமைச்சர் நம்பிக்கை தெரிவித்ததுடன், வளர்ந்து வரும் பாதுகாப்பு அடிப்படையிலான சவால்கள் குறித்த உரையாடலை முன்னெடுப்பதிலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு கல்வி கட்டமைப்பை நிறுவுவதிலும் கூட்டத்தின் பங்கை வரவேற்றார்.

இலங்கையானது, ஆசியான் பிராந்திய மன்றத்தின் நடவடிக்கைகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், ஆயுதப்பரவல் தடை மற்றும் ஆயுதக் குறைப்பு மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகிய துறைகளில் ஆசியான் பிராந்திய மன்றத்தின் கூட்டங்களை நடத்தி இணைத் தலைமை தாங்கியுள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு உரையாடலுக்கான ஆசியான் தலைமையிலான ஒரு முக்கியமான பொறிமுறையாக ஆசியான் பிராந்திய மன்றம் உள்ளது; மேலும் இலங்கையானது,  2007 முதல் ஆசியான் பிராந்திய மன்றத்தில் உறுப்பினரென்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 ஜனவரி 25

 

Please follow and like us:

Close