டாக்காவில் நடைபெறும் 6வது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைக் குழுவிற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை

டாக்காவில் நடைபெறும் 6வது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைக் குழுவிற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை

பங்களாதேஷின் டாக்காவில் மே 12 முதல் 13 வரை நடைபெற்ற 6வது இந்து சமுத்திர மாநாட்டில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான இலங்கைக் குழு, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் தொடக்க அமர்வு மே 12ஆந் திகதி மாலை 150 வெளிநாட்டு பிரதிநிதிகள், உயர்மட்ட அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பிராந்தியத்தில் பங்கேற்கும் 25 நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் முன்னிலையில் பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவால் தொடங்கி வைக்கப்பட்டது. 'அமைதி, செழிப்பு மற்றும் உறுதியான எதிர்காலத்திற்கான கூட்டாண்மை' என்ற தொனிப்பொருளில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தை வலுப்படுத்துவதற்கான பாதை வரைபடத்தை பட்டியலிடுவதற்கு முக்கிய பங்குதாரர்களின் கூட்டத்தை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மே 13ஆந் திகதி நடைபெற்ற விசேட கருப்பொருள் அமர்வுகளில் இலங்கையின் அறிக்கையை வழங்கியதுடன், கடல்சார் பங்காளித்துவ நாடுகளுடன் அமைதி, பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்திக்காக  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் ஈடுபாட்டை சுட்டிக் காட்டினார். மேம்படுத்தப்பட்ட இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவத்தையும், கடல்சார் களங்களுக்கிடையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் பிராந்தியவாதத்தையும் அவர் எடுத்துரைத்த அதே வேளை, அத்தகைய பிராந்தியவாதம் ஆசியான், ஐயோரா மற்றும் பிம்ஸ்டெக் ஆகியவற்றுக்கு இடையே நெருக்கமான தொடர்பை உருவாக்க பாடுபட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

நீலப் பசுமைப் பொருளாதார முயற்சிகள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட இந்து சமுத்திரத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்கு கடல்சார் அரசுகளுடனான தனது பங்காளித்துவத்தையும் ஈடுபாட்டையும் மேலும் வலுப்படுத்துவதற்கும் வர்த்தகத்தை வளர்ப்பதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் டி சில்வா தனது கருத்துகளில் தெரிவித்தார்.

இந்து சமுத்திர மாநாடு பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கான பிராந்திய ஒத்துழைப்பின் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, பிராந்திய அரசுகள் மற்றும் பிராந்தியத்தின் முதன்மை கடல்சார் பங்காளிகளை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றாகக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2023 மே 13

 

Please follow and like us:

Close