வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோர் ஜூன் 29 ஆந் திகதி மாலை வேளையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலொன்றில் இருதரப்பு சார்ந்த ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
கோவிட் தொற்றுநோயின் போதான அமெரிக்க - இலங்கை ஒத்துழைப்பு, அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை விநியோகித்தல், இலங்கைக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையளித்தல் மற்றும் கோவிட் தொடர்பான 5.8 மில்லியன் அமெரிக்க டொலர் இருதரப்பு உதவி, பொருளாதார மீட்பு முன்முயற்சிகள், காவல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த விடயங்கள், பயங்கரவாதத்தை எதிர்த்தல் மற்றும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
எம்.சி.சி. ஒப்பந்தத்தின் மீளாய்வு அறிக்கை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியன குறித்து அமெரிக்க செயலாளருக்கு விளக்கமளித்த அமைச்சர் குணவர்தன, இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்ற செயன்முறைகளுக்கு அளித்த ஆதரவுகளுக்காக அமெரிக்காவிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் அமெரிக்க சுதந்திர தினத்திற்கான இலங்கையின் வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
30 ஜூன் 2020