2023 அக்டோபர் 17 அன்று, பீஜிங் சர்வதேச ஒத்துழைப்புக்கான மூன்றாவது பெல்ட் மற்றும் ரோட் மன்றம் நடைபெற்ற- சமகாலத்தில், பாகிஸ்தான் பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஆகியோரின் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது.
இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளிப்பது குறித்தும், பொருளாதார மீட்சிக்காக செயல்படுத்தப்படும் துரித நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இருதரப்பும் பொருளாதார மீட்சியின் செயல்பாட்டில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களை அவ்வப்போது பரிமாறிக்கொள்ளவும், பரஸ்பர நலன் மற்றும் ஆர்வம் சார்ந்த துறைகளில் மேலும் ஒத்துழைப்பைத் தொடரவும் ஒப்புக்கொண்டன.
இரு தலைவர்களும் காசாவில் அதிகரித்துவரும் வன்முறை மற்றும் இராணுவ நடவடிக்கை குறித்து ஆழ்ந்த இரங்கல்களை பகிர்ந்து கொண்டனர், இதன் விளைவாக பல அப்பாவி பொதுமக்களினதும், குழந்தைகளினதும் இறப்பு மற்றும் பாதிப்புக்கள் கடுமையான மனிதாபிமான ரீதியான இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன.
மேலும் பொதுமக்களின் உயிரிழப்பைத் தடுக்கவும், காசாவில் முற்றுகையிடப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்களுடனான உதவிகளை வழங்குவதற்கான, மனிதாபிமான வாயிலைத் திறக்கவும் இரு தலைவர்களும் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் அழைத்தனர். காஸாவில் நீடித்து வரும் மோதலுக்கு அரசியல் தீர்வை அடைவதன் அவசியத்தை அவர்கள் மேலும் வலியுறுத்தியதுடன், இரு நாட்டு தீர்வின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம், மோதலைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்தனர்.
இலங்கை தூதரகம்
பீஜிங்
2023 அக்டோபர் 18