ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேகி வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களை கொழும்பில் இன்று சந்தித்தார். இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் பெறுமதி வாய்ந்த பரஸ்பர உறவுகளின் தெளிவான மைல்கற்களை நினைவு கூர்ந்த ஜப்பானிய அமைச்சர், புதிய அரசாங்கத்தின் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பன்முகப்படுத்துவதற்குமான ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.
விஜயம் செய்திருந்த பிரமுகரை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, நாட்டின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக ஜப்பான் தொடர்ந்தும் வழங்கி வரும் உதவி மற்றும் ஆதரவுக்கு இலங்கையின் நேர்மையான பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, அனைத்து இலங்கையர்களுக்குமான பாதுகாப்பு மற்றும் செழிப்பை அடைந்து கொள்வதற்கான புதிய அரசாங்கத்தின் வீதி வரைபடத்தை அமைச்சருடன் பகிர்ந்து கொண்டார்.
ஜப்பான் நிதியளித்த திட்டங்களை செயற்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் மொடேகி, நிலையான அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை அடைவதற்கான இலங்கையின் பயணத்தில் ஜப்பான் ஒரு உறுதியான ஆதரவாளராகவும் பங்களிப்பாளராகவும் இருக்கும் என மீண்டும் கூறினார்.
விஜயம் செய்திருந்த அமைச்சர், உத்தியோகபூர்வ விஜயத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, விரைவில் ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் குணவர்தன அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இரு பிரமுகர்களும் பரந்த அளவிலான உறவுகளிலான ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் குறித்து கலந்துரையாடியதுடன், பல்வேறு துறைகளில் பொதுவான முயற்சிகளின் பங்காண்மையை ஆழப்படுத்துவதற்கான வழிகளையும், முறைமைகளையும் ஆராய்வதற்கு ஒப்புக்கொண்டனர்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் டோக்கியோவிலிருந்து விஜயம் செய்திருந்த சிரேஷ்ட தூதுக்குழுவினர் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்றிருந்தனர். இலங்கை சார்பில் பதில் வெளிவிவகார செயலாளர் அஹமத் ஏ. ஜவாத் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
13 டிசம்பர் 2019