IORA සමුද්‍රීය ආරක්ෂාව හා සුරක්ෂිතභාවය පිළිබඳ ක්‍රියාකාරී කණ්ඩායමට නායකත්වය දෙන ශ්‍රී ලංකාව 2022 සිට 2026 දක්වා සිය දෙවැනි වැඩ සැලැස්ම සකස් කරයි

IORA සමුද්‍රීය ආරක්ෂාව හා සුරක්ෂිතභාවය පිළිබඳ ක්‍රියාකාරී කණ්ඩායමට නායකත්වය දෙන ශ්‍රී ලංකාව 2022 සිට 2026 දක්වා සිය දෙවැනි වැඩ සැලැස්ම සකස් කරයි

இலங்கையின் தலைமையிலான கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயற்குழுவின் 2வது கூட்டம், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகள் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் மெய்நிகரான பங்கேற்புடன் 2021 மார்ச் 18 முதல் 19 வரை நடைபெற்றது.

மார்ச் 18ஆந் திகதி இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைத்த வெளியுறவுச் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் குறித்த எமது கலந்துரையாடல்களை செயற்பாட்டு ரீதியாக மாற்றியடைக்க வேண்டிய நேரம் இதுவாகும் என்பதை எடுத்துரைத்தார். போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் பல முயற்சிகள், பல பிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தேசிய அரசாங்கங்கள் இருந்தபோதிலும், போதைப்பொருள், மனித மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற கடல்சார் மூவகைக் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்து சமுத்திரத்தில் உள்ள சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல் நடவடிக்கைகளிலிருந்து வரும் ஆபத்தான 40% மீன்பிடித்தலை அவர் மேலும் வலியுறுத்தினார். கடல் சூழலில் சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலின் தாக்கம் மற்றும் மீன்வளங்களின் நிலையான முகாமைத்துவம் ஆகியவற்றையும் வெளியுறவுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டார். வங்காள விரிகுடாவில் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இறப்பு வலயம் மற்றும் இந்து சமுத்திரத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பெரிய குப்பைத் தொட்டியை நினைவு கூர்ந்த அவர், கடல் சூழலில் கடத்தல் மற்றும் மாசுபாடு அதிகரிப்பு ஆகியவற்றில் மீன்பிடிப் படகுகள் எவ்வாறு ஈடுபட்டுள்ளன என்பதை தெளிவு படுத்தினார். 'மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 8 மில்லியன் மெட்ரிக் டொன் பிளாஸ்டிக்கை கடல்களுக்கு விடுவிப்பதால், விரைவில் மீன்களை விட கடலில் அதிகளவான பிளாஸ்டிக் இருக்கும், இதன் விளைவாக ஆரோக்கியமற்ற சூழ்நிலைகள் ஏற்படும்' எனக் குறிப்பிட்டார்.

'இப்போது, மீண்டும், இந்து சமுத்திரத்தில் இன்னும் மூன்று நிலைகள் உருவாகின்றன அல்லது ஏற்கனவே தோன்றியுள்ளன என நான் குறிப்பிட்ட வேண்டும். அவற்றுள் முதலாவது கடல் வர்த்தகத்தின் அரசியல்மயமாக்கல், இரண்டாவது கடல் சார்ந்த உட்கட்டமைப்பின் அரசியல்மயமாக்கல் மற்றும் மூன்றாவது இந்து சமுத்திரத்தின் இராணுவமயமாக்கல் அதிகரித்தமை' என மேலும் குறிப்பிட்ட அவர், 'இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு பெரிய சமச்சீரற்ற தன்மை இருப்பதால் எங்களுக்கு சர்வதேச விதிகள் சார்ந்த கடல்சார் ஒழுங்கொன்று அவசியமாவதுடன், கடல்சார் வர்த்தக இணைப்பை மேம்படுத்துதல் வேண்டும்' என வலியுறுத்தினார்.

இலங்கையின் தலைமையிலான கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயற்குழுவின் முன்னணி நாடாக அடுத்த பதவிக்காலத்தில் இலங்கை தனது தலைமை வகிபாகத்தைத் தொடருவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், 2021ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் தொடங்கும் துணைத் தலைமைப் பதவியில் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலான மேம்பட்ட பிராந்திய ஒத்துழைப்புக்காக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் குடும்பத்திற்கு நன்மை பயக்கும் வகையில் இலங்கை ஒரு சிறந்த பங்கை வகிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் வெளியுறவுச் செயலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

மெய்நிகர் அங்குரார்ப்பண நிகழ்வில் இணைந்த இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் பதில் பொதுச் செயலாளர் கலாநிதி. குணவன் எச். கடொட், இலங்கையின் தலைமையிலான கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயற்குழுவின் இரண்டாவது கூட்டத்தை கோவிட்-19 தொற்று சவால்களுக்கு மத்தியில் கலப்பு ரீதியான வடிவத்தில் நடாத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள விதிவிலக்கான ஏற்பாடுகளுக்காக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சிற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

'கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் எவ்வாறு உருவாகும் என்பது எதிர்பார்ப்புக்களைப் பொறுத்ததாகும். இந்த சவாலான காலங்களில், வலுவான கூட்டாண்மை, பயனுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடல் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும். தற்போதைய இலங்கையின் தலைமையிலான கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயற்குழுவின் வேலைத் திட்டத்தை மீளாய்வு செய்து புதுப்பிப்பதற்கும், மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்வின் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பிற்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் முன்னோக்கி செல்லும் வழியில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் இன்று இந்த கலப்பு ரீதியான சந்திப்பின் மூலம் ஈடுபடலாம்' என அவர் மேலும் வலியுறுத்தினார்.

கோவிட்-19 நெறிமுறைகளின்படி நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், கொழும்பைத் தளமாகக் கொண்ட இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகள் மற்றும் உரையாடல் கூட்டாளர் நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஏனைய தூதுவர்கள், ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர், போதைப்பொருள் மற்றும் குற்றம் சார் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவர் மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஏனைய பங்குதாரர் நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. ஹசந்தி உருகொடவத்த திசாநாயக்க தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர், நிகழ்ச்சி நிரல் மற்றும் முறைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, 20 பிரதிநிதிகளால் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் தலைமையிலான கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயற்குழுவின் 08 கொத்தணிக் குழு உறுப்பு நாடுகளால் 2021 மார்ச் 17ஆந் திகதி முறைசாரா மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது. அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகஸ்கார், மொரீஷியஸ், தென்னாபிரிக்கா, இலங்கை, தன்சானியா மற்றும் ஐக்கிய அரபு இலாச்சியம் ஆகியன இந்தக் கொத்தணிக் குழுவில் உள்ளடங்கும்.

பங்கேற்கும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைத் தூண்டுவதற்காக, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த ஒரு அறிமுக அமர்வு நடைபெற்றது. அமர்வில், 'இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பிற்கு எதிராக அபிவிருத்தியடைந்து வரும் அச்சுறுத்தல்கள்' மற்றும் நிலையான கடல் அமைப்பின் திரு. ஜேய் பென்சன் எழுதிய 'கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு: நிலையான கடல் பார்வையில் இருந்து சவால்கள் மற்றும் தீர்வுகள்' குறித்து போதைப்பொருள் மற்றும் குற்றம் சார் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவர் திரு. அலன் கோல் விளக்கக்காட்சிகளை வழங்கினார். இந்த அறிமுக அமர்வை கிழக்குக் கடற்படைப் பகுதியின் தளபதியும் இலங்கைக் கடற்படையின் தலைமை நீரப்பரப்பாளருமான ரியர் அட்மிரல் வை.என். ஜயரத்ன நிர்வகித்தார்.

23 உறுப்பு நாடுகளில் 15 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 44 பிரதிநிதிகள் மெய்நிகர் ரீதியாக இணைந்து கொண்டதுடன், 2022 - 2026 காலகட்டத்திற்கான இலங்கையின் தலைமையிலான கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயற்குழுவின் அடுத்தடுத்த வேலைத் திட்டம் குறித்து கலந்துரையாடினர். முந்தைய வேலைத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள், வடிவம், செயற்படுத்தல் பொறுப்புக்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உறுப்பு நாடுகளால் முன்மொழியப்பட்ட புதிய நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. 2022 முதல் 2026 வரையிலான பணித் திட்டம் இன்னும் குறிப்பிட்ட செயற்பாடுகளுடன் இறுதி செய்யப்பட்டதுடன், முன்னோக்கி நகர்வதில் மிகவும் நடைமுறைக்கேற்றதாகக் கருதப்பட்ட அவற்றுக்கு ஒவ்வொரு உறுப்பு நாடும் அல்லது இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயலகம் பொறுப்புடையனவாகும். இது 2019 - 2021 வேலைத் திட்டத்திலிருந்து நிறைவு செய்யப்படாத நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளது.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 மார்ச் 26

Please follow and like us:

Close