பரஸ்பர நலன்கள் மற்றும் கரிசனைகள் தொடர்பான பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கான பாதையை இந்து சமுத்திர கரையோர நாடுகளுக்கும், பாரிய கடல்வழி பாவனையாளர்களுக்கும் அமைத்துக் கொடுப்பதனை இலக்காகக் கொண்ட 'இந்து சமுத்திரம்: எமது எதிர்காலத்தை வரையறுத்தல்' மாநாடு 2018 ஒக்டோபர் 11 - 12ஆந் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
உலகின் பணிமிகுதியானதும், நெருக்கடியான வணிக தாழ்வாரங்களில் ஒன்றாக இந்து சமுத்திரம் வளர்ச்சியடைந்து, உலகின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் கப்பல் சரக்குகளையும், ஒரு பங்கு மொத்த சரக்குகளையும் ஏற்றிச்செல்வதன் வாயிலாக, மிகவும் நெருக்கடியான கடல் வழிக்கான தொடர்பாடலுக்கு அனுசரணையளித்து, உலகின் வணிகம் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் நேரடியாக தாக்கம் செலுத்தும் தருணமொன்றில் இந்த மாநாடு நடைபெறுகின்றது.
இந்து சமுத்திரம்: எமது எதிர்காலத்தை வரையறுத்தல் மாநாடானது, சர்வதேச பிரமுகர்கள், மற்றும் கரையோரம் மற்றும் அதற்கு அப்பாலுள்ள நாடுகளின் நிபுணர்களைக் கொண்ட இரண்டு நாள் கருத்தரங்கில் பிராந்தியத்தின் உறுதியான சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்களை கண்டறியவுள்ளது. இந்து சமுத்திரத்தில் இலங்கையின் புவியியல் அமைவிடம் மற்றும் சர்வதேச சமூகத்துடனான சமாதானமான ஈடுபாட்டிலான அதன் நீண்டகால வரலாறு ஆகியன, குறித்த சர்வதேச மாநாட்டிற்கான முக்கியமான மையமாக இலங்கையை மாற்றியுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெறுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள இந்த மாநாடானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆதரவுடனான பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஒரு முயற்சியாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் மாநாட்டின் அங்குரார்ப்பண உரை நிகழ்த்தப்படவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அடிப்படை குறிப்பு உரையை நிகழ்த்தவுள்ளார். அங்குரார்ப்பண அமர்வின் போது சமுத்திர தூதுவருக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விஷேட தூதுவர் பீற்றர் தொம்சன் அவர்களும் உரை நிகழ்த்தவுள்ளார்.
'இந்து சமுத்திரத்தின் பிரயாண சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள்: பகிரப்பட்ட புரிந்துணர்வு வாயிலாக' என தலைப்பிடப்பட்டுள்ள அங்குரார்ப்பண குழுவானது இந்திய பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் பிரதான பிரதி உதவிச் செயலாளர் எலிஸ் ஜீ. வெல்ஸ் மற்றும் சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் யி சியான்லியாங் மற்றும் தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதி பணிப்பாளர் நாயகம் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான குழுவின் தவிசாளர் கலாநிதி அனில் சூக்லால் ஆகிய அடிப்படை கொள்கை வகுப்பாளர்களை உள்ளடக்கவுள்ளது.
உரையாற்றுபவர்களும், பங்குபற்றுபவர்களும் தமது கலந்துரையாடல்களில், இந்து சமுத்திரத்தின் பொருளாதாரம்: உலகின் புதிய வளர்ச்சித்துருவம்; நீருக்கு கீழான வாழ்க்கை: அபிவிருத்தி பரப்பாக சமுத்திரங்களை பலப்படுத்துதல்; தெளிவின்மைக்கான ஒரு நிறைவு: கடலில் பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை; மற்றும் இந்து சமுத்திரத்தில் சர்வதேச சட்டத்தை பலப்படுத்துதல்: கடல்சார் சட்டம் பற்றிய ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் வளர்ந்து வரும் பிரச்சினைகள் ஆகிய தலைப்புக்களிலான நான்கு விடயப்பரப்புக்களில் கவனம் செலுத்தவுள்ளனர்.
இந்த மாநாட்டின் செயற்பாடுகளை கட்டியெழுப்புவதற்காகவும், இந்து சமுத்திரத்தின் பாரியளவிலான சமாதானம், பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு பங்களிப்புச் செய்யும் கரையோர நாடுகள் மற்றும் பாரிய கடல்வழி பாவனையாளர்களுக்கு மத்தியிலான புரிந்துணர்வின் வாயிலாக நகர்தல் ஆகியவற்றுக்காக, அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பல்தரப்பு இராஜதந்திர மாநாட்டிற்கான முன்னோடியாக இந்த மாநாடு அமைகின்றது.
இவ்வாறான நிகழ்வுகள் பிராந்தியத்தின் வாணிப, கணிப்பியல் திட்ட மற்றும் நிதியியல் மையமாக இலங்கையை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் கொள்கைகளை மேலும் விஸ்தரிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொள்கை வகுப்பாளர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கியுள்ள தடம் 1.5 பயிற்சியான இந்த மாநாடானது, போதைப்பொருள் மற்றும் குற்றம் பற்றிய ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன், பிரதம மந்திரியின் அலுவலகம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
05 ஒக்டோபர் 2018