கொழும்பிலுள்ள இந்தியப் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் ஜேக்கப் அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் நான்காவது தொகுதியை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோரிடம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் வைத்து இன்று கையளித்தார்.
2020 மே 08 ஆந் திகதி சிறப்பு இந்திய விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சுமார் 12.5 டொன் எடையுள்ள மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்ளடங்கிய இந்தப் பொருட்களின் தொகுதியானது, கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராகப் போராடும் அண்டை மற்றும் பங்காண்மை நாடுகளுக்கு உதவுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியைக் குறித்து நிற்கின்றது.
இந்தப் பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து, அரசியல், வர்த்தகம், சுற்றுலா, சுகாதாரம் மற்றும் பிராந்திய விவகாரங்கள் போன்றவற்றிலான இருதரப்பு ஒத்துழைப்பினை மீளாய்வு செய்வதற்கானதொரு சுருக்கமான சந்திப்பிற்கு பிரதி உயர் ஸ்தானிகர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரை அழைத்தார்.
பொதுவான சவால்களுக்கு முகங்கொடுக்கும் தற்போதைய காலகட்டத்தில், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட முக்கியமான வளங்களை நன்கொடைகளாகப் பகிர்ந்து கொள்வதிலான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் பாராட்டினார். தேசிய ரீதியாக நாடு முடக்கப்பட்டிருந்த நிலையிலும், இலங்கைப் பிரஜைகளை இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்புவது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கைகளுக்காக அமைச்சர் குணவர்தன இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
11 மே 2020