இலங்கை-பெல்ஜியத்தின் ஆரம்ப கட்ட அரசியல் ஆலோசனைகள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துகின்றன

இலங்கை-பெல்ஜியத்தின் ஆரம்ப கட்ட அரசியல் ஆலோசனைகள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துகின்றன

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவில் முக்கியமானதொரு மைல்கல்லைக் குறிக்கும் விதமாக, இலங்கை-பெல்ஜியம் அரசியல் ஆலோசனைகளின் ஆரம்ப சுற்று, 2026, பெப்ரவரி 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று பிரஸ்ஸல்ஸில் வெற்றிகரமாக நடைபெற்றது. இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், உரையாடலை விரிவுபடுத்துதல் மற்றும் புதிய கூட்டாண்மைகளை ஆராய்வதற்கான இரு அரசாங்கங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த விவாதங்கள் பிரதிபலித்தன. இரு நாடுகளும் 2017 டிசம்பரில் அரசியல் ஆலோசனைகளை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இலங்கை தூதுக்குழுவிற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன தலைமை தாங்கியதுடன், பெல்ஜியம் தூதுக்குழுவிற்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் இருதரப்பு விவகார பணிப்பாளர் நாயகம் பர்ஜிட் ஸ்டீவன்ஸ் தலைமை தாங்கினார்.

அரசியல் ஈடுபாடு, உயர் மட்ட வருகைகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு, பேரிடர் தடுப்பு மற்றும் காலநிலை மீள்தன்மை, பசுமை மாற்றம் மற்றும் பலதரப்பு மன்றங்களுக்குள் ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகள் குறித்து இரு தரப்பினரும் விரிவான மதிப்பாய்வை மேற்கொண்டனர். 2028 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு, 75 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையைக் கொண்டாடுவது குறித்தும் இந்த விவாதம் கவனம் செலுத்தியது.

வர்த்தகம், சுற்றுலா மற்றும் பசுமை எரிசக்தி, மருந்துகள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்கள், துறைமுகங்கள் மற்றும் ஏற்பாட்டியல் சேவைகள் போன்ற துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றில் முக்கியத்துவம் அளித்து, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் இலங்கை தனது ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் (EU) நிலவும் ஒத்துழைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தின் கீழ் இலங்கையின் ஈடுபாடு, கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் குறித்தும் இரு பிரதிநிதிகளும் ஆலோசித்தனர். பொருளாதார மீட்சி மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான இலங்கையின் முயற்சிகளை பெல்ஜியம் வரவேற்ற அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற சர்வதேச தளங்களில் பெல்ஜியத்தின் ஆதரவிற்கு இலங்கை நன்றி தெரிவித்தது. சமீபத்திய தித்வா சூறாவளியைத் தொடர்ந்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கட்டத்திற்கு இலங்கை பெல்ஜியத்தின் ஆதரவை எதிர்ப்பார்த்தது.

ஆக்கபூர்வமான ஈடுபாடு மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அதே வேளையில், நல்லாட்சி, தேசிய நல்லிணக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் குறித்து இலங்கை விளக்கியது. பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களும் விவாதிக்கப்பட்டன; இரு நாடுகளும் பன்முகத்தன்மை, ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கான மரியாதை மற்றும் சர்வதேச சட்டத்தை மதிக்க தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தின.

காலநிலை நடவடிக்கை, கடல்சார் நிர்வாகம், கடல்சார் பாதுகாப்பு, அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் ஒருவருக்கொருவரது அங்கத்துவத்திற்கான சாத்தியமிக்க ஆதரவு ஆகியவற்றில் பகிரப்பட்ட முன்னுரிமைகளை இந்த ஆலோசனைகள் எடுத்துக்காட்டின. நவீனமானதும், வினைத்திறன்மிக்கதுமான  கூட்டாண்மையை முன்னேற்றுவதில் அவற்றின் மதிப்பை அங்கீகரித்து, அரசியல் ஆலோசனைகளை தொடர்ந்து தொடர இரு தரப்பினரும் இணங்கினர். இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்புடன் இவ்வொன்றுகூடல் நிறைவடைந்தது.

பெல்ஜியம், லக்செம்பர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை தூதுவர் சந்தன வீரசேன மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கை தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றனர். பெல்ஜிய பிரதிநிதிகள் குழுவில் ஆசியா மற்றும் ஓஷியானியா துறையின் பணிப்பாளர் திரு. வில்லியம் அசெல்போர்ன் மற்றும் கூட்டாட்சி பொதுச் சேவை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பின் சிரேஷ்ட அதிகாரிகள் இடம்பெற்றனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு

2026, பெப்ரவரி 18

Please follow and like us:

Close