கொழும்பில் 2019 ஏப்ரல் 05 தொடக்கம் 07 வரை நடைபெறவுள்ள ஆசிய - ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது கூட்டம் (AEPF), ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு (ICAPP)

கொழும்பில் 2019 ஏப்ரல் 05 தொடக்கம் 07 வரை நடைபெறவுள்ள ஆசிய – ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது கூட்டம் (AEPF), ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு (ICAPP)

ஆசிய - ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது கூட்டம் (AEPF) மற்றும் ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு (ICAPP) ஆகியவற்றை 2019 ஏப்ரல் 05 தொடக்கம் 07 வரை இலங்கை நடாத்தவுள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் தொன்னூறு (90) பங்கேற்பாளர்கள் இந்த சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு (ICAPP) எனப்படுவது ஆசிய - ஓசனிய நாடுகளின் அரசியல் கட்சிகளைக் கொண்ட 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிலிப்பைன்ஸின் மனிலாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதொரு மன்றமாகும். ICAPP யின் தலைமையகம் கொரியக் குடியரசின் சியோலில் அமைந்துள்ளது. பல்வேறு கொள்கைகளையுடைய அரசியல் கட்சிகளுக்கு இடையில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல், ஆசிய நாடுகளுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை அதிகரித்தல், அரசியல் கட்சிகளின் பிணைப்பின் வாயிலாக ஆசியாவின் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் பிராந்தியத்தில் நிலையான சமாதானம் மற்றும் பகிரப்பட்ட செழுமை ஆகியவற்றுக்கானதொரு சூழலை உருவாக்குதல் போன்றன இந்த ICAPP இன் குறிக்கோள்கள் ஆகும்.

ICAPP செயற்பாடுகளில் அண்மைக் காலங்களில் இலங்கையில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆக்கபூர்வமாக பங்குபற்றியிருந்தன.

கடந்த காலங்களில் ICAPP இன் செயற்பாடுகளுக்காக இலங்கையினால் வழங்கப்பட்டுள்ள சாத்தியமான பங்களிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் முகமாக, ஆசிய - ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை (AEPF) 2019 ஏப்ரல் 05 தொடக்கம் 07 வரை கொழும்பில் நடாத்துமாறு ICAPP இன் செயலகம் இலங்கைக்கு அழைப்பு விடுத்தது. 2019 மார்ச் 22ஆந் திகதி ICAPP இன் பொதுச் செயலாளர் திரு. பார்க் ரோ-புங் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதம மந்திரி, கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், கௌரவ ஆரம்ப கைத்தொழில்துறை மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் மற்றும் தொடர்புடைய அமைச்சுக்களின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் ஆகியோருடனான சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார். இந்த சந்திப்புக்களின் விளைவாக, AEPF இனை 2019 ஏப்ரல் மாதத்தில் கொழும்பில் நடாத்துவதற்கு இலங்கை தனது சம்மதத்தை தெரிவித்தது.

இந்த மாநாடானது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து ஆரம்ப கைத்தொழில்துறை மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பாவிலுள்ள ICAPP உறுப்பு நாடுகளின் ஆளும் மற்றும் எதிர் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை ஒன்று சேர்த்து ஆலோசனைகளை முன்னெடுப்பதற்கும், அவர்களது அனுபவங்களிலிருந்து கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வதற்குமான களத்தினை அமைத்துக்கொடுப்பதற்கானதொரு சந்தரப்பமாக இது இலங்கைக்கு அமையும். ICAPP யின் உறுப்பு நாடு என்ற வகையில் உலகப் பெறுமானங்கள் மற்றும் சவால்களை உலகின் ஏனைய நாடுகளுடன் இணைந்து பகிர்ந்து கொள்வதற்கான இலங்கையின் தோற்றப்பாட்டினை இந்த மாநாடு மேலும் ஏற்படுத்தும்.

இந்த மாநாட்டின் தலைப்பு, 'அதிகரித்து வரும் வயதான சனத்தொகையினரின் சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழில்வாய்ப்பு சார்ந்த சவால்களையும், ஆசியப் பிராந்தியத்தின் தற்போதைய அவசரமான நிலைமை சார்ந்த விடயங்களையும் அரசியல் கட்சிகள் எவ்வாறு கையாளுகின்றன' என்பது ஆகும்.

இலங்கை ஏற்கனவே வயதான சனத்தொகையினர் சார்ந்த சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இந்த மாநாட்டின் தலைப்புடன் தொடர்பான விடயங்கள் குறித்து உலகின் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடி, கருத்துக்களை பரிமாற்றம் செய்து, அனுபவங்களைப் பகிர்ந்து, சிறந்த நடைமுறைகள் தொடர்பில் கற்றுக் கொள்வதற்கு இந்த வகையிலான மாநாடுகள் இலங்கைக்கு தனித்துவமானதொரு சந்தர்ப்பத்தினை வழங்குகின்றன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

04 ஏப்ரல் 2019

 

Please follow and like us:

Close