கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் வகிபாகத்தை வெளிவிவகார செயலாளர் விளக்கினார்

கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் வகிபாகத்தை வெளிவிவகார செயலாளர் விளக்கினார்

 'வெளிநாடுகளிலுள்ள தமது பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையிலுள்ள பெற்றோர்கள் தெளிவாக அக்கறை கொண்டுள்ளனர். எனினும், அவர்கள் எமது தூதரகங்களை தொலைபேசி அழைப்பொன்றின் மூலமாக தொடர்பு கொள்ள முடியும் என்பதுடன், அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் ஆதலால், இது தொடர்பில் அவர்கள் எந்தவித அசௌகரியங்களையும் உணரத் தேவையில்லை. பாரியதொரு பேரழிவு ஏற்படுமிடத்து, உங்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவுகளை வழங்கும் என்பதை நாங்கள் தெளிவாகக் கூற விரும்புகின்றோம். தொடர்ச்சியாக நிலைமைகளைக் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தயாராக உள்ளது. இந்த நிலைமை குறைவடைகையில், பொருளாதாரத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக நாங்கள் களம் அமைத்து வருகின்றோம்.'

கோவிட்-19 உலகம் முழுவதும் பரவி வருகின்றமையால், இலங்கையில் வைரஸின் தாக்கத்தை நிவர்த்தி செய்வதிலும், மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் கொண்டுள்ள வகிபாகத்தை வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க விளக்கினார். இந்த விளக்கத்தினை ஏப்ரல் 4 ஆந் திகதி அத தெரன 24 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஊடகவியலாளர் இந்தீவரி அமுவத்தவுடனான ஹைட் பார்க் நிகழ்ச்சியில் வெளிவிவகார செயலாளர் வழங்கினார். 'உலகின் பல்வேறு பகுதிகளில் வியாபித்துள்ள கோவிட்-19 வைரஸ் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, தெற்காசிய நாடுகளில் ஏராளமான இலங்கை மாணவர்கள் உள்ளனர். இலங்கை முதலீட்டாளர்களும் இந்த நாடுகளில் பரவி வாழ்கின்றனர். தற்போது அவர்களது முக்கியமான பிரச்சனை இலங்கைக்கு நாடு திரும்புவதேயாகும். மத்திய கிழக்கை எடுத்துக் கொண்டால், அங்கே சுமார் 1.5 மில்லியன் தொகையான தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் தற்போது தமது தொழில் வாய்ப்பை இழந்து, தமது உயிர்களுக்கான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து கவலைப்படுகின்றார்கள். இந்த எல்லா விடயங்களையும் கருத்தில் கொண்டு, 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' என்ற இணைய முகப்பை உருவாக்கியுள்ளோம். வெளிநாடுகளிலுள்ள 2.6 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுடன், அவர்களுக்குத் தேவையான ஆதரவுகளை வழங்குவதற்காக, நேரடியாக இணைப்பை ஏற்படுவதே எமது நோக்கமாகும். மார்ச் 26 ஆந் திகதி இந்த இணைய முகப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, 45,770 பேர் தங்களை இதில் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் சில பிரச்சினைகளை சில மணி நேரங்களுக்குள் தீர்த்து வைக்க முடிந்தது. இதுபோன்ற பல சம்பவங்கள் சமீப காலங்களில் பதிவாகியுள்ளன' எனக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் பணிபுரியும் எமது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறித்து குறிப்பாக பேசிய ஆரியசிங்க, 'மத்திய கிழக்கில் பணிபுரியும் எமது வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இது எமது முக்கியமான பணி என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். இந்த நேரத்தில் நாம் அவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமானது ஏனையவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை விடக் குறைவாக இருப்பதாக அவர்கள் உணரக்கூடாது. இருதரப்பு உறவுகள் மூலமாக அவர்கள் தொடர்பாக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சர்வதேச அமைப்பும், கரிடாஸ் போன்ற அமைப்புக்களும் மத்திய கிழக்கில் தொழில் வாய்ப்பை இழந்த சிலருக்கு ஆதரவளிப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சில இலங்கையர்கள் சட்டரீதியானவர்களோ, அல்லது சட்டவிரோதமானவர்களோ ஆயினும் அவர்களை இலங்கையர்களாகவே கருத வேண்டும். இந்த இலங்கையர்கள் அந்த நாடுகளில் கவனத்திற் கொள்ளப்படாவிட்டால், நாங்கள் அது குறித்து தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

தொற்றுநோய் குறைவடையும் வரை தற்போது தங்கியிருக்கும் நாடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கும், மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பிரதிபலிப்புக்களுக்கும் பதிலளித்த திரு. ஆரியசிங்க, 'உலகில் இலங்கையர்களின் தன்மை குறித்து எங்களுக்குத் தெளிவான புரிதல் உள்ளது. அவர்கள் இலங்கைக்கு நாடு திரும்புவது குறித்து அரசாங்கம் இப்போது தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. எனவே எங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை இந்த நேரத்தில் இலங்கையர்களுக்கு வழங்க வேண்டாம் என தூதரகப் பிரதானிகளிடம் தெரிவித்தேன். சிரமங்களை சமாளிப்பதற்கு இலங்கையர்களுக்கு உதவுவதே இந்த நேரத்தில் மிக முக்கியமான பணியாகும். அதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை மீட்க இலங்கை அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என நாங்கள் வெளிப்படையாகக் கூறுகின்றோம். நான் அதை உறுதியாக நம்புகின்றேன். வுஹானிலிருந்த மாணவர்கள் மற்றும் இந்தியாவிலிருந்த யாத்திரிகர்கள் தொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கைகள் போலவே, ஏனைய இலங்கையர்கள் தொடர்பாகவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்' எனக் குறிப்பிட்டார்.

இலங்கை எதிர்கொள்ளக்கூடிய பொருளாதார சவால்கள் குறித்து விளக்கிய திரு. ஆரியசிங்க, 'நாங்கள் தற்போதைய சூழ்நிலையை எதிர்கொண்டு, நாளைய நடவடிக்கைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். இத்தகைய கவனமான திட்டமிடல்கள் மூலமாக மாத்திரமே இன்று எமக்கு மேலே உயர்ந்து வரும் இருண்ட மேகங்களை வெற்றி கொள்ள முடியும். வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவு தற்போது இந்த விடயத்தில் சிறப்பான கவனத்தை செலுத்தி வருகின்றது. இந்த நோக்கத்திற்காக, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, சுற்றுலா அமைச்சு மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றுடன் இணைந்து அவர்கள் பணியாற்றுகின்றனர். ஒரு முக்கியமான பொருளாதாரக் காரணியாக 'கேள்வி' உள்ளது. ஒரு பொருளை விற்பனை செய்ய முடியுமா, இல்லையா என்ற அச்சம் காரணமாக பொருளொன்றின் கேள்வி குறைந்து வருகின்றது. இந்த நேரத்தில் உலகம் முழுவதிலும் காணப்படும் நிலைமை இதுவேயாகும். எனவே இந்த யதார்த்தத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும். தேயிலை போன்ற பாரம்பரியத் தயாரிப்புக்களுக்கு இந்த நேரத்தில் சில நாடுகளில் அதிக கேள்வி உள்ளது. நாங்கள் பாரம்பரியமாக உற்பத்தி செய்யாத தயாரிப்புகளுக்கும் பெரும் கேள்வி உள்ளது. முகம் மற்றும் உடல் கவசங்களை வழங்குவதற்காக எமது ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்றுள்ளோம். இந்தக் கோரிக்கைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். இந்த வாய்ப்பை எம்மால் நன்கு பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது. தற்போது இலங்கையில் சுமார் 15000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளனர். இலங்கைக்கான அவர்களது பிரதிபலிப்பு மிகவும் உயர்வானதாகும். இலங்கையில் தங்கியிருந்த ஒரு வெளிநாட்டவர் பி.பி.சி.க்கு அண்மையில் வழங்கிய பேட்டி உங்களுக்கு நினைவிருக்கலாம். அது பணம் செலுத்த முடியாத ஒரு விளம்பரமாகும். அந்த வீடியோவின் மூலமாக, இலங்கை குறித்த நம்பிக்கையையும், சாதகமான உறுதியையும் குறித்த வெளிநாட்டவர் உலகிற்கு வழங்கியுள்ளார்' எனத் தெரிவித்தார்.

“வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்துள்ள ஆதரவை நாம் பாராட்ட வேண்டும். கோவிட்-19 நிதிக்கு பங்களிப்புச் செய்வதற்காக அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்கின்றார்கள். மேலும் எமக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையும் அவர்கள் வழங்குகின்றார்கள். மேலும் பங்களிப்புக்களை வழங்குமாறு நான் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன். இந்த நேரத்தில் நிதி மற்றும் உபகரணம் சார்ந்த ஆதரவுகளை வழங்குமாறு எமது நேச நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். எமது கடன் தவணைகளுக்கான திகதியில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். அத்தகைய நிவாரணங்களை வழங்குவதற்காக உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும்படி கேட்டுக்கொள்கின்றேன்.”

சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஏற்பட்ட கோவிட்-19 வைரஸ் பற்றி நாங்கள் முதலில் வெளிப்படுத்தியபோது, இந்த வைரஸின் செயற்பாடு குறித்து நாம் அறிந்திருக்கவில்லை. ஆனால் சீனாவிலுள்ள எமது தூதரகம் மற்றும் உதவித் தூதரகம் ஆகியன ஆரம்பத்திலிருந்தே நிலைமையை எதிர்கொண்டன. வுஹான் மாகாணத்தில் வைரஸ் பரவியபோது முதலாவது இலங்கை மாணவர் தொகுதியையும், சீனாவிலிருந்த ஏனைய இலங்கையர்களையும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு இந்த வெளிநாட்டுத் தூதரகங்கள் முக்கிய காரணமாக இருந்தன. இதனால்தான் நான் அவர்களை வீரர்களாகக் கருதுகின்றேன். பேரழிவு ஏற்படும் தருணமொன்றில் அத்தகைய வகிபாகத்தை வகிப்பது எந்தவொரு தூதரகத்தினதும் பொறுப்பாகும். ஆனால் இதற்கு முன்னர் நாங்கள் இத்தகையதொரு சூழ்நிலையை எதிர்கொள்ளவில்லை. இன்று சீனாவில் நாம் சந்தித்த நிலைமை இப்போது உலகம் முழுவதும் வியாபித்துள்ளது.

தனது கருத்துக்களை நிறைவு செய்துகொண்ட திரு. ஆரியசிங்க, இந்த முயற்சியில் நாம் எந்தளவு தூரம் வெற்றி எய்தியுள்ளோம் என்பதனை காலம் எமக்குத் தெரியப்படுத்தும் என வலியுறுத்தினார். அத்துடன் எம்மால் மேற்கொள்ளப்படும் உரிய நடவடிக்கைகள் மூலமாக பொருளாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கடக்க முடியும். இந்த நேரத்தில், வெளிநாட்டு உறவுகள் அமைச்சாகிய நாங்கள் இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம். இந்த நிலைமை குறைவடையும் போது எதிர்காலத்திற்காகவும், பொருளாதாரத் துறையின் சவால்களை எதிர்கொள்வதற்காகவும் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
08 ஏப்ரல் 2020
Please follow and like us:

Close