பர்மிங்கம் பௌத்த மகா விகாரையில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸ்தூபி, பர்மிங்கம் பௌத்த மகா விகாரையின் பிரதம அதிபரும், பிரித்தானியாவின் பிரதி பிரதம சங்க நாயக்க தேரரும், இலங்கை சங்க சபையின் உப தலைவருமான வணக்கத்திற்குரிய கலாநிதி விதரந்தெனியே கஸ்ஸப நாயக்க தேரரினால் O.B.E. பொது மக்கள் வந்தனத்திற்காக, 2023, செப்டம்பர் 16 அன்று, திறந்துவைக்கப்பட்டது. உயர்ஸ்தானிகர் சரோஜா சிரிசேன வணக்கத்திற்குரிய கலாநிதி விதரந்தெனியே கஸ்ஸப நாயக்க தேரரின் அழைப்பின் பேரில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
உயர் ஸ்தானிகர் சிறிசேன, தனது உரையின்போது, புத்தரின் போதனைகளையும் இலங்கை விழுமியங்களின் சாரத்தையும் பிரித்தானியாவிலுள்ள அடுத்த தலைமுறை இலங்கையர்களுக்கு வழங்குவதில் வணக்கத்திற்குரிய விதரந்தெனியே கஸ்ஸப நாயக்க தேரரின் முயற்சிகளைப் பாராட்டினார். பர்மிங்கம் பௌத்த மகா விகாரையானது, ஒரு வழிபாட்டு மையமாகத் திகழ்வதுடன், பௌத்த போதனைகள் மற்றும் இலங்கையின் கலாச்சார விழிப்புணர்வை, குறிப்பாக பிரித்தானிய இலங்கை சமூகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினருக்கு ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய பர்மிங்கம் பௌத்த மகா விகாரையின் தலைவர் வணக்கத்திற்குரிய கலாநிதி விதரந்தெனியே கஸ்ஸப தேரர், பர்மிங்கம் பௌத்த மகா விகாரை மீது, உயர்ஸ்தானிகராலயத்தின் ஈடுபாட்டைப் பாராட்டி, திறப்பு விழாவில் பங்கேற்றதற்காக உயர்ஸ்தானிகருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
பர்மிங்கம் நகர சபையின் பிரபு திரு.சமன் லால், இலங்கை மற்றும் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பௌத்த மதகுருமார்கள் மற்றும் பர்மிங்கமில் உள்ள இலங்கை பௌத்த சமூகத்தின் உறுப்பினர்கள் போன்றோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எளிமையான தொடக்கத்தில் இருந்து, பர்மிங்கம் மகா விகாரை ஒரு முழுமையான சர்வதேச பௌத்த கலாச்சார மையமாக உருவாக்கப்பட்டுள்ளது, இது ஐரோப்பாவின் மிகப்பெரிய தேரவாத பௌத்த வணக்கஸ்தலமாக அறியப்படுகிறது. பர்மிங்கம் பௌத்த மகா விகாரையில் ஸ்தூபிக்கான அடிக்கல் 05 ஜூலை 2020, அன்று உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவினால் நாட்டப்பட்டது.
இலங்கை உயர் ஸ்தானிகராலயம்
லண்டன்
20 செப்டம்பர் 2023