உயர் ஸ்தானிகர் மொரகொடவின் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடனான சந்திப்பு

 உயர் ஸ்தானிகர் மொரகொடவின் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடனான சந்திப்பு

 இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவின் பீகார் மாநிலத்தில் நடைபெறும்,  “வைஷாலி ஜனநாயக விழா”வில், கலந்துகொள்வதற்கான மூன்று நாள் விஜயத்தில், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை சனிக்கிழமையன்று (16), பீகார் மாநிலத்தின் தலைநகரான பட்ணாவில், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

முதலமைச்சர் ஸ்ரீ நிதிஷ் குமார், இலங்கை உயர் ஸ்தானிகர் மற்றும் அவரது பிரதிநிதிகளுக்கு அன்பான வரவேற்பளித்ததுடன், அவர்களுடைய கலந்துரையாடல் சுமுகமான முறையில் இடம்பெற்றது.

முதலமைச்சரும் உயர்ஸ்தானிகரும், பீகார் மாநிலத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான  வலுவான நாகரீக இணைப்புகளை, குறிப்பாக பௌத்த மதத்தை அடிப்படையாககக்கொண்ட தொடர்புகளை மீளாய்வு செய்தனர்.

உயர் ஸ்தானிகர் மொரகொட, பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயா உட்பட்ட புனித பௌத்த ஸ்தலங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான இலங்கையின்  பௌத்த மத யாத்திரிகர்கள் வருகை தருவதை நினைவு கூர்ந்ததுடன், அவர்களுக்கு சாத்தியமான சகல உதவிகளையும் வழங்குமாறு முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். பதிலுக்கு, முதலமைச்சர் நிதீஷ் குமார், பௌத்த மதம் தனது மனதில் பிடித்திருக்கும் மிக முக்கியமான இடத்தை குறிப்பிட்டதுடன், இலங்கை மீது அவர் கொண்ட, தனிச்சிறப்பு மிக்க ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.

பீகார் மாநிலத்திற்கும், இலங்கைக்கும் இடையே இருக்கும் உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய விடயங்கள் இச்சந்திப்பின் பொது கலந்துரையாடப்பட்டது.

அவர்களது உரையாடலைத்தொடர்ந்து, முதல்மைச்சர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் தோட்டத்தில், புத்தகயாவின் ஸ்ரீ மஹா போதி மரத்திலிருந்து கொண்டுவந்து நாட்டப்பட்ட மரக்கன்றை காட்டுவதற்கு, உயர்ஸ்தானிகரை அழைத்துச்சென்றார்.

பீகாருக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய நாகரீகத் தொடர்பின் அடையாளமாக, உயர் ஸ்தானிகர் மொரகொட, அனுராதபுரத்தில் நடுவதற்காக பிக்குணி சங்கமித்தாவிடம் அனுப்பப்படவிருந்த புனித ஸ்ரீ மகா போதியின் வலது கைப்புற கிளையை சம்பிரதாயபூர்வமாக அடையாளப்படுத்திக் குறிப்பிடும்வண்ணம் காட்சியளிக்கும் அசோக மன்னனைச் சித்தரிக்கும் , களனிய ரஜ மகா விஹாரைச்சுவர் சித்திரத்தின் பாரிய பிரதியொன்றை, முதலமைச்சருக்கு வழங்கினார்.

முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, உயர் ஸ்தானிகர் மொரகொட அனுராதபுரத்திலுள்ள ஸ்ரீ மகா போதியிலிருந்து பெறப்பட்ட கன்றொன்று, நாட்டப்பட்ட, பட்ணாவிலுள்ள ஸ்மிருதி பூங்காவிற்கும் விஜயமளித்தார்.

உயர்ஸ்தானிகர் மொரகொட, பீகார் முதலமைச்சரை பரஸ்பர வசதியான தேதியொன்றில், இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தமையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்

புது டில்லி

 18 செப்டம்பர் 2023

Please follow and like us:

Close