இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் உரையாற்றுவதற்கு உயர்ஸ்தானிகர் மொரகொடவுக்கு அழைப்பு

இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் உரையாற்றுவதற்கு உயர்ஸ்தானிகர் மொரகொடவுக்கு அழைப்பு

இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் கலாநிதி பிபேக் டெப்ராயை 2022 டிசம்பர் 08ஆந் திகதி புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்தித்து கலந்துரையாடினார்.

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு என்பது இந்திய அரசாங்கத்துக்கு, குறிப்பாகப் பிரதமருக்குப் பொருளாதாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களில் ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு சுதந்திர அமைப்பாகும்.

இக்கலந்துரையாடலின் போது, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர், உயர்ஸ்தானிகர் மொரகொடவிடம் சபையின் ஆணை மற்றும் செயற்பாடுகள் குறித்து விளக்கினார். உயர்ஸ்தானிகர் மொரகொட, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், அந்தச் செயற்பாட்டிற்கு சபை எவ்வாறு உதவ முடியும் என வினவினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தலைவர் டெப்ராய், உயர்ஸ்தானிகர் மொரகொடவிற்கு, பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பாக சபையில் பரஸ்பரம் வசதியான திகதியில் உரையாற்றுமாறு அழைப்பு விடுத்ததுடன், அதை உயர்ஸ்தானிகர் ஏற்றுக்கொண்டார்.

கோவிட் விநியோக சங்கிலிப் பின்னடைவு மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு  ஆகியவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட ஏனைய விடயங்களாகும்.

கலாநிதி பிபேக் டெப்ராய் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பொருளாதார  நிபுணராவதுடன், அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார். அவர் பகவத் கீதை உட்பட பல பண்டைய இந்திய இதிகாசப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒரு சிறந்த எழுத்தாளராவார். 2005-2008 வரை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தினால் நடாத்தப்பட்ட ஒரு சுயாதீன சர்வதேச அமைப்பான 'ஏழைகளின் சட்ட அதிகாரமளித்தல் தொடர்பான உயர்மட்ட ஆணைக்குழு'விலும் அவர் பணியாற்றியுள்ளதுடன், அதில் உயர்ஸ்தானிகர் மொரகொட உறுப்பினராக இருந்தார்.

 

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது தில்லி

 

2022 டிசம்பர் 08

 

Please follow and like us:

Close