வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் நடத்தப்பட்ட வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் முடிவில், புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான 07 தூதரகத் தலைவர்கள், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை 2025, மே 14 அன்று சந்தித்தனர்.
சந்திப்பின் போது, நியமிக்கப்பட்ட தூதரகத் தலைவர்கள், இலங்கைக்கு அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கான முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டும் விளக்கக்காட்சிகளை வழங்கினர். அதில், இருதரப்பு மற்றும் பல்தரப்பு உறவுகளை மேம்படுத்துதல், வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்பாடு மற்றும் உரிய நாடுகளில் உள்ள இலங்கைச் சமூகங்களுடனான ஈடுபாடு போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தியிருந்தனர்.
புதிய தூதரகத் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள்: இந்தியாவிற்கான உயர் ஸ்தானிகர் மகிஷினி கொலோன்னே, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதி ஜெயந்த சந்திரசிறி ஜயசூரிய, பாகிஸ்தானுக்கான உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் ப்ஃரெட் செனவிரத்ன, கியூபாவிற்கான தூதுவர் மஹிந்ததாச ரத்நாயக்க, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான தூதுவர் பேராசிரியர் அருஷா குரே, ஜப்பானுக்கான தூதுவர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க, ஐக்கிய இராச்சியத்திற்கான உயர் ஸ்தானிகர் எஸ்.டி.என்.யு. சேனாதீர.
இவ்வழிகாட்டல் நிகழ்ச்சியில் வர்த்தக சபைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம், இலங்கை தேயிலைச் சபை, ஏற்றுமதி மேம்பாட்டு அதிகார சபை, முதலீட்டு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான ஊடாடும் அமர்வுகள் இடம்பெற்றன. கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு கப்பல் துறை, இலங்கை நெனோ தொழில்நுட்ப நிறுவனம் (SLINTEC), கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயம் மற்றும் ஏனைய சில தனியார் துறை நிறுவனங்கள் போன்றவற்றுக்கான கள விஜயங்களும் இந்நிகழ்வில் உள்ளடங்கியிருந்தன.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் மனிதவளம் மற்றும் தூதர்ப் பணியாக முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் சுமித் தஸநாயக்க ஆகியோரும் அமைச்சருடனான கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 மே 16